செய்திகள்
கோப்புப்படம்

ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கொரோனா - அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2020-11-05 20:27 GMT   |   Update On 2020-11-05 20:27 GMT
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கொரோனா பாதிப்பு அறிகுறி இருந்ததால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. பணக்காரர், ஏழை, அரசியல்வாதி என பாகுபாடின்றி உலகம் முழுவதும் பலர் கொரோனா தாக்கத்துக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்திலும் கவர்னர், அமைச்சர்கள், கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், தொழிலதிபர்கள் என பல பிரபலங்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு திடீரென சளி மற்றும் இருமல் அதிகரித்துள்ளது.

இதனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தினர். இதையடுத்து நீதிபதி ஏ.பி.சாஹி உடனடியாக அங்கு கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

இதையடுத்து எடுக்கப்பட்ட சி.டி. ஸ்கேனில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, சற்று தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:-

தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு எடுக்கப்பட்ட சி.டி. ஸ்கேனில் அவருக்கு லேசான தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தனி டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது தலைமை நீதிபதி லேசான அறிகுறிகளுடன் நலமுடன் உள்ளார். தலைமை நீதிபதிக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவின் அடிப்படையில் அடுத்த கட்ட சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News