செய்திகள்

ஆண்டிப்பட்டியில் கைப்பற்றப்பட்ட பணம் எங்களுடையது அல்ல- தங்க தமிழ்ச்செல்வன்

Published On 2019-04-17 07:33 GMT   |   Update On 2019-04-17 07:33 GMT
ஆண்டிப்பட்டியில் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும், அ.ம.மு.க.விற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். #LoksabhaElections2019 #AMMK #ThangaTamilselvan
தேனி:

தேனி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நேற்று ஆண்டிப்பட்டியில் தேர்தல் அதிகாரிகள் ரூ.1.48 கோடி பணத்தை பறிமுதல் செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அந்த பணத்திற்கும், அ.ம.மு.க.விற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அ.தி.மு.க.வும், தேர்தல் ஆணையமும் இணைந்து ஜோடித்த நாடகம்தான் இது.

அந்த வணிகவளாகம் அ.தி.மு.க பிரமுகர் அமரேஷ் என்பவருக்கு சொந்தமானது. அவ்வாறு இருக்கும்போது அவரது இடத்தில் நாங்கள் பணம் பதுக்கி வைக்க முட்டாள்களா? ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் ரூ.150 கோடி அளவுக்கு வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்தார். இதுகுறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.



பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தேனி பாராளுமன்ற தொகுதி மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த முயற்சி எடுக்கப்படுகிறதா என்பதற்கு விளக்கம் சொல்ல முடியாது.

தேர்தலை நிறுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியமும் இல்லை. தோல்வி பயம் காரணமாக அ.தி.மு.க.வினரே இதுபோன்ற புகாரை பரப்பி வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். #LoksabhaElections2019 #AMMK #ThangaTamilselvan
Tags:    

Similar News