ஆன்மிகம்
நாகராஜ சுவாமி திருக்கோவில்

நலம் தரும் நாகராஜ சுவாமி திருக்கோவில்- நாகர்கோவில்

Published On 2021-08-21 03:34 GMT   |   Update On 2021-08-21 03:34 GMT
இங்கு நாகராஜர் சன்னிதிதான் பிரதானம் என்றாலும், காசி விஸ்வநாதர் என்ற பெயரில் சிவனும், அனந்தகிருஷ்ணன் என்ற பெயரில் திருமாலும் அருள்பாலிக்கின்றனர்.
நாகராஜா கோவில் கிழக்கு நோக்கி அமைந்திருந்தாலும் தெற்கு வாசல் வழியாகத் தான் பக்தர்கள் செல்கின்றனர். இந்த வாசலுக்கு ‘மகாமேரு மாளிகை என்று பெயர்.

கோவில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரம் என்று அதிகமான நாகர்சிலைகள் காணப்பட்டாலும், நாகராஜ சுவாமி கருவறைக்கு முன்பாக இரண்டு பெரிய நாகர் சிலைகள், துவாரபாலகர்களாக இருக்கும். இதில் ஒன்று தர்னேந்திரன் என்ற ஆண் நாகம், மற்றொன்று பத்மாவதி என்ற பெண் நாகம்.

நாகங்கள் வசிப்பதாக நம்பப்படுவதால், நாகராஜர் கருவறையின் மேற்கூரை மட்டும் இன்றளவும் ஓலைக்கூரையாகவே இருக்கிறது. ஆடி மாதத்தில் இதனைப் பிரித்து, புதிய கூரை கட்டுவார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் மையத்தில் அமைந்துள்ளது, நாகராஜ சுவாமி திருக்கோவில். இந்தப் பகுதியில் பெண் ஒருத்தி நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்தபோது, ரத்தம் பீறிட்டது. ஊர்மக்கள் அனைவரும் வந்து பார்த்தபோது, நெற்கதிருக்கு கீழே நாகராஜர் வடிவம் இருந்தது. அதைத் தொடர்ந்து அந்த இடத்தைச் சுற்றிலும் ஓலைக்குடிசை வேய்ந்து சிறிய சன்னிதி அமைத்தனர் என்று கோவில் தல வரலாறு சொல்கிறது.

இங்கு நாகராஜர் சன்னிதிதான் பிரதானம் என்றாலும், காசி விஸ்வநாதர் என்ற பெயரில் சிவனும், அனந்தகிருஷ்ணன் என்ற பெயரில் திருமாலும் அருள்பாலிக்கின்றனர்.

ஆலயத்திற்குள் அமைந்திருக்கும் மிகப்பெரிய தீர்த்த குளத்துக்குள் ஏராளமான பாம்புகள் வசிப்பதாக நம்பப்படுகிறது. எனவே அந்த தீர்த்தக் குளத்தை பூட்டியே வைத்திருக்கிறார்கள். ஆலயத்தின் வெளியேயும் தீர்த்தக்குளம் உள்ளது.

இங்கு ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மிகவும் பிரசித்தம். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு கூடும் பக்தர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை.

இந்த ஆலயத்தில் உள்ள அனந்தகிருஷ்ணர், கடுசர்க்கரையால் செய்யப்பட்டவர். இதனால் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. இவரது சன்னிதி முன்பாக மட்டுமே கொடி மரம் உள்ளது. இதில் கருடனுக்கு பதிலாக ஆமை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நாகம், கோவில் கொண்டிருக்கும் இடம் என்பதால் கருடனுக்கு பதில் ஆமை இருப்பதாக கூறுகிறார்கள்.

உத்திராயனம், தட்சிணாயனம் தொடங்கும் போது நிறைபுத்தரிசி பூஜை செய்வது வழக்கம். பயிரிட்டு விளைந்த முதல் நெல்லை கொண்டு வந்து, நாகருக்கு படைத்து பூஜை செய்வதை ‘நிறைபுத்தரிசி பூஜை’ என்கிறார்கள்.

குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், தோல் நோய், உடற்பிணி நீங்க இங்கே வந்து வழிபடுபவர்கள் எண்ணிக்கை அதிகம்.

இந்த ஆலயத்தில் நாகராஜர் பிரசாதமாக, வாழை இலையில் சந்தனம், பூ மற்றும் மண் பிரசாதம் வழங்குவார்கள். இந்த மண் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் இருப்பது சிறப்புக்குரியது.
Tags:    

Similar News