செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வாகன சோதனையின்போது வேன் மோதி போக்குவரத்து ஆய்வாளர் பலி: ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்

Published On 2021-11-22 09:18 GMT   |   Update On 2021-11-22 09:18 GMT
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மோட்டார் ஆய்வாளர் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் வட்டார போக்குவரத்து பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர்:

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கனகராஜ் (வயது 55). இவர் பறக்கும் படை பிரிவிலும் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் சீருடை அணிந்து அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கிருந்து அருகில் உள்ள கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள வெங்கக்கல்பட்டி பிரிவு மேம்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த வேனை ஆய்வாளர் கனகராஜ், சோதனை செய்வதற்காக கைகளை காட்டி நிறுத்த முயன்றார். ஆனால், மின்னல் வேகத்தில் வந்த அந்த வேன் நிற்காமல் கனகராஜ் மீது மோதிவிட்டு சென்றுவிட்டது.

இதில் தூக்கி வீசப்பட்ட கனகராஜ் பலத்த காயமடைந்து நடுரோட்டில் உயிருக்கு போராடினார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



இதுகுறித்து தாந்தோன்றி மலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான வேனை ஓட்டி வந்த டிரைவர் அந்த வேனில் என்ன எடுத்து சென்றார்? ஏன் நிறுத்தாமல் வாகனத்தை இயக்கினார்? இந்த சம்பவம் விபத்தா அல்லது கொலையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மோட்டார் ஆய்வாளர் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் வட்டார போக்குவரத்து பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற வேன் மோதி உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News