செய்திகள்
கோப்புபடம்

மார்த்தாண்டம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கேரள வாலிபர் கைது

Published On 2021-09-15 10:43 GMT   |   Update On 2021-09-15 10:43 GMT
தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டினார்.

குழித்துறை:

மார்த்தாண்டம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடைகள், பள்ளிகள், வணிக வளாகங்களில் இரவு நேரங்களில் பூட்டை உடைத்து திருடப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. அந்த சம்பவங்களில் துப்புதுலக்கி திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் மேற்பார்வையில் மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகிருஷ்ணன், சிவசங்கர், ஜான் கிறிஸ்துராஜ் மற்றும் ஏட்டுகள் சுந்தர் வினோஜன், ஜுடின், குமார் விஜி ஆகியோர் தலைமையிலான தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகியிருந்த காட்சிகளில் ஏதாவது தகவல்கள் கிடைக்கிறதா? என்று பார்த்தனர். அப்போது அந்த திருட்டுகளில் சம்பந்தப்பட்டவர் பழைய குற்றவாளியான கேரள மாநிலம் நேமம் பகுதியை சேர்ந்த ஜெசீம் (வயது25) என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு மார்த்தாண்டம் பகுதியில் நடந்த திருட்டுகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அவரிடமிருந்து இரணியல் போலீஸ் நிலைய பகுதியில் இருந்து திருடப்பட்ட சுமார் ரூ.3லட்சம் மதிப்புடைய ஜீப், களியக்காவிளை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் திருடப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் மார்த்தாண்டம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக கடைகளில் உடைத்து திருடப்பட்ட பணம் மற்றும் உடைப்பதற்கு பயன்படுத்திய கம்பிகள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

இதனையடுத்து ஜெசீம் கைது செய்யப்பட்டார். அவரின் மீது ஏற்கனவே மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகளும், களியக்காவிளை மற்றும் கேரளா நேமம் போலீஸ் நிலையங்களில் தலா ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News