செய்திகள்
அமெரிக்க பாராளுமன்றம், வாஷிங்டன்

காஷ்மீரில் தகவல் தொடர்பு இருட்டடிப்புக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் - அமெரிக்க பாராளுமன்றம்

Published On 2019-10-08 09:56 GMT   |   Update On 2019-10-08 09:56 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்துவரும் தகவல் தொடர்பு இருட்டடிப்புக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என இந்திய அரசை அமெரிக்க பாராளுமன்றக்குழு வலியுறுத்தியுள்ளது.
வாஷிங்டன்:

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின்கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்தது.

மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு இருந்த மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.

இதற்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்து அங்கு கடுமையான கட்டுப்பாடுகள், போலீஸ் தடை உத்தரவு போன்றவை விதிக்கப்பட்டன.

கைபேசி இணைப்புகள், இண்டர்நெட் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு உள்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இவ்விவகாரத்தை பாகிஸ்தான் தனது அரசியல் ஆயுதமாக கையில் எடுத்து ’மனித உரிமை மீறல்’ என்ற குற்றச்சாட்டுடன் இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.



இதற்கிடையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கா பாராளுமன்ற உறுப்பினர் பிரமிளா ஜெயபால் மற்றும் 13 அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து காஷ்மீரில் தகவல் தொடர்பு சாதனங்கள் முடக்கப்பட்டுள்ள விவகாரத்துக்கு தீர்வுகாண வேண்டும். அங்கு மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடியை கடந்த மாதத்தில் வலியுறுத்தினர்.

இந்நிலையில், அமெரிக்க பாராளுமன்றத்தின் வெளியுறவுத்துறை விவகாரங்கள் குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி.க்கள் மீண்டும் தற்போது இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக இந்த குழுவின் டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியான பதிவில், ‘இந்திய அரசு காஷ்மீரில் தகவல் தொடர்புகளை இருட்டடிப்பு செய்துள்ளது அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தடைகளை நீக்குவதற்கும் இந்தியாவில் மற்ற குடிமக்கள் அனுபவிக்கும் சுதந்திரம் மற்றும் உரிமைகளை காஷ்மீர் மக்களும் அனுபவிக்க வழிசெய்யவும் இந்தியாவுக்கு இது சரியான நேரமாகும்’
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த சுமார் 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ள  பாராளுமன்ற வெளியுறவுத்துறை விவகாரங்கள் குழுவின் மேற்பார்வையில் 6 துணை குழுக்களும் இயங்குகின்றன.

உலக நாடுகளுக்கு நிதியுதவி, சுகாதாரம், பிறநாடுகளில் உள்ள மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க அரசுக்கு ஆலோசனை கூற இந்த குழுக்களுக்கு உரிமையுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News