செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள்.

மஸ்கட்டில் இருந்து வந்த சென்னை விமானத்தில் 3 கிலோ தங்ககட்டி சிக்கியது

Published On 2019-11-15 07:08 GMT   |   Update On 2019-11-15 07:08 GMT
மஸ்கட்டில் இருந்து வந்த சென்னை விமானத்தில் 3 கிலோ கடத்தல் தங்கம் சிக்கி இருப்பது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்பட்டு வருவது அதிகரித்து உள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு தங்கம் கடத்தல்காரர்களை கைது செய்தும், தங்கத்தை பறிமுதல் செய்தும் வருகிறார்கள்.

எனினும் தங்கம் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு விமான நிலைய ஊழியர்கள் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது.

நேற்று சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 1 கிலோ தங்கம் மற்றும் ரூ.45½ லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கி இருந்தது. இந்த நிலையில் தற்போது 3 கிலோ கடத்தல் தங்கம் சிக்கி இருப்பது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்வேஸ் விமானம் வந்தது. பின்னர் நள்ளிரவு அந்த விமானம் மீண்டும் மஸ்கட்டிற்கு புறப்பட இருந்தது.

இதையடுத்து ஊழியர்கள் அந்த விமானத்தை சுத்தம் செய்தனர். அப்போது ஒரு இருக்கையின் கீழ் கேட்பாரற்று பை கிடந்தது.

இதனை பார்த்து சந்தேகம் அடைந்த ஊழியர்கள் இது பற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வந்து பையை சோதனை செய்தனர்.

அல் 3.3 கிலோ எடையுள்ள 3 தங்க கட்டிகள் இருந்தன. அதனை மர்ம நபர்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 கோடியே 33 லட்சம் ஆகும்.

சுங்க அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக கடத்தலில் ஈடுபட்டவர்கள் தங்க கட்டி இருந்த பையை விமான இருக்கையின் கீழே விட்டு சென்று உள்ளனர்.

இதையடுத்து அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் பட்டியலை வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். கண்காணிப்பு கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து கடத்தல் தங்கம் சிக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News