செய்திகள்
போராட்டம்

இழப்பீடு தொகை தராததால் விவசாயி தற்கொலை - கிராம மக்கள் போராட்டம்

Published On 2021-10-11 11:29 GMT   |   Update On 2021-10-11 11:29 GMT
மேல்மலையனூர் அருகே இழப்பீடு தொகை தராததால் 200 அடி உயர உயர மின்கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
மேல்மலையனூர்:

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே கலிங்கமலை கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 57). விவசாயி. இவருடைய நிலத்தில் உயர் மின்கோபுரம் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்ததாரர் ஒருவர் ரூ.10 லட்சம் தருவதாக கூறியுள்ளார். பின்னர் கடந்த ஆண்டு முன்பணமாக ரூ.1 லட்சத்தை மணியிடம் அந்த ஒப்பந்ததாரர் கொடுத்து மின்கோபுரம் அமைக்க அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு மணி சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரது நிலத்தில் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இதனால் மணி தனது நிலத்தில் விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால், கட்டிட வேலைக்காக சென்னைக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று தனது நிலத்திற்கு மணி சென்றார். அப்போது அங்கு உயர்மின்கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதையடுத்து அவர் அங்கிருந்த ஒப்பந்ததாரரிடம், தனக்கு தரவேண்டிய இழப்பீட்டு தொகையை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக அங்கிருந்த தொழிலாளர்கள் செயல்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த மணி, அங்குள்ள 200 அடி உயர் மின்கோபுரத்தில் ஏறி கயிற்றில் தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்த ஒப்பந்ததாரர் மற்றும் பணியில் இருந்த தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதனிடையே அங்கு ஆடு மேய்த்து கொண்டிருந்த 2 பேர் உயர் மின்கோபுரத்தில் ஏறி மணியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் மணி தூக்கில் தொங்கியவாறே இறந்தது தெரிந்தது. இதையடுத்து மணியின் உடலை தூக்கில் இருந்து இறக்கி அங்கேயே கீழே விழாதபடி கட்டி வைத்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணியின் உடலை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது மணியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், உரிய இழப்பீடு வழங்கினால்தான் உடலை கீழே இறக்க அனுமதிப்போம் என்று கூறி அங்குள்ள கலிங்கமலை கூட்டு சாலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, திண்டிவனம் சப்-கலெக்டர் அமீத், தாசில்தார் நெகருன்னிசா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய இழப்பீடு பெற்றுத்தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனை ஏற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து மேல்மலையனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சாமளவண்ணன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உயர் மின்கோபுரத்தில் இருந்த மணியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இது குறித்து வளத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News