செய்திகள்
புதுவை முதல்வர் நாராயணசாமி

பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு சதியை முறியடிப்போம்: முதல்-மந்திரி நாராயணசாமி ஆவேசம்

Published On 2021-02-17 08:17 GMT   |   Update On 2021-02-17 08:17 GMT
பாரதிய ஜனதாவின் ஆட்சி கவிழ்ப்பு சதிவேலையை கண்டிப்பாக முறியடிப்போம் என புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி:

புதுவையில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

புதுவை அமைச்சரவையில் சீனியர் அமைச்சராக பதவி வகித்த நமச்சிவாயம், காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் ஆகியோர் கடந்த மாதம் தங்கள் பதவியை ராஜினாமா செய்து பா.ஜனதாவில் இணைந்தனர்.

இந்நிலையில் புதுவை அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து நேற்று முன்தினம் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார்.

இதனிடையே நேற்று காலை மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரை நேரில் சந்தித்து அளித்தார்.

இதனால் புதுவை சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்துள்ளது. மொத்தம் 15 எம்.எல்.ஏ.க்கள் இருந்த காங்கிரஸ் கட்சியில் பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலு தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது 4 எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு வெளியேறியதால் சபாநாயகர் உட்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலம் 10 ஆக குறைந்துள்ளது. காங்கிரசை ஆதரிக்கும் தி.மு.க. 3, சுயேச்சை ஒருவர் என காங்கிரஸ் கூட்டணிக்கு 14 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. எதிர்கட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அ.தி.மு.க. 4, பா.ஜனதா (நியமனம்) 3 என மொத்தம் 14 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. இதனால் ஆளுங்கட்சி, எதிர்கட்சி சமநிலையை அடைந்துள்ளது. சட்டசபையில் மொத்தம் 28 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் 15 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால்தான் மெஜாரிட்டி கிடைக்கும். காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்துள்ளது.

எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி, அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர், மெஜாரிட்டி இழந்த காங்கிரஸ் அரசு தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அவசர ஆலோசனைக்கூட்டம் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தினேஷ்குண்டுராவ், சஞ்சய்தத் முன்னிலையில் நடந்தது.

கூட்டத்துக்கு பின் முதல்-அமைச்சர் நாராயண சாமி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் எதிர்கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனை வெளிப்படையாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார். அவர் கூறும்போது, எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அவர்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள்.

இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க அவர்கள் ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளனர் என தெரிவித்தார்.

ஒருவேளை நெருக்கடி முற்றும்பட்சத்தில் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து எதிர்கட்சிகளின் பலத்தை குறைத்து மெஜாரிட்டியை நிரூபிக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

மேலும் அமைச்சரவை தாமாக முன்வந்து ராஜினாமா செய்வதை காட்டிலும் ஆட்சியை கவிழ்த்தால் புதுவை மக்கள் மத்தியில் காங்கிரசுக்கு அனுதாபம் கிடைக்கும் என்றும் காங்கிரசார் எண்ணுகின்றனர்.


இதனிடையே இன்று ராகுல்காந்தி எம்.பி. புதுவைக்கு வந்துள்ளார். அவரிடம் தற்போதைய புதுவை அரசியல் சூழ்நிலை குறித்து நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

இது சம்பந்தமாக முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகும் காரணம் அனைவருக்கும் தெரியும். எனது ஆட்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக செயல்பட்டனர்.

ஆட்சியில் 4ž வருடம் இருந்து விட்டு வெளியேறுவது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகிறது.

அமைச்சர்களின் துறைகளில் நான் தலையிட்டது கிடையாது. அவர்கள் எந்த நோக்கத்துடன் பா.ஜனதா சென்றுள்ளனர் என மக்களுக்கு தெரியும். இந்திய நாட்டில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது பா.ஜனதாவின் வேலையாக உள்ளது. அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், கோவா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகியவற்றில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை பிடித்தனர்.

இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சி இருக்கும் மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது.

எங்கும் பெரும்பான்மை கிடையாது. பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா ஆட்சியை கொண்டு வருகிறார்கள். இது ஜனநாயகம் கிடையாது. தர்மம் கிடையாது. அராஜகம் தான் செய்கிறார்கள்.

எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுவோம் என பா.ஜனதாவினர் மிரட்டுகின்றனர். யாரும் மனமுவந்து செல்லவில்லை. அங்கு சென்ற பிறகு தான் பா.ஜனதா எப்படிப்பட்ட கட்சி என அவர்களுக்கு தெரியும்.

எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியதால் காங்கிரஸ் பலவீனமடையவில்லை. புதுவையில் பா.ஜனதா போணி ஆகாத கட்சி.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 18 தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தனர். இந்தத் தேர்தலில் எத்தனை பேர் டெபாசிட் வாங்குவார்கள் என பார்க்க வேண்டும். மக்கள் காங்கிரஸ்-தி.மு.க. பக்கம் இருக்கிறார்கள். பதவியில் இல்லாமல் தேர்தலை சந்திக்க காங்கிரஸ்-தி.மு.க.வுக்கு பயம் கிடையாது. எங்கள் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. 2 எம்.எல்.ஏ. சென்றுவிட்டதால் ஆட்சி போனதாக அர்த்தமில்லை. பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறோம்.

பா.ஜனதாவின் ஆட்சி கவிழ்ப்பு சதிவேலையை கண்டிப்பாக முறியடிப்போம்.

தற்போது பதவி விலகியுள்ள அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கு கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து கடுமையாக தொல்லைகளை கொடுத்தார். அவரை திட்டமிட்டு பழி வாங்கினார்.

அவர் தனது தொகுதி தொடர்பாக எந்த திட்டங்களை கொண்டு சென்றாலும் அதை கவர்னர் புறக்கணித்தார். அவருக்காக 4 ஆண்டுகளாக நானும் போராடினேன். மல்லாடி கிருஷ்ணாராவ் தற்போது வரை எங்களோடுதான் இருக்கிறார். அவரை சமரசப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
Tags:    

Similar News