உள்ளூர் செய்திகள்
செம்போடையில் திடீரென்று உள்வாங்கிய கிணறு.

விவசாயியின் தோட்டத்தில் அமைக்கப்பட்ட கிணறு உள்வாங்கியது

Published On 2022-04-17 10:15 GMT   |   Update On 2022-04-17 10:15 GMT
வேதாரண்யம் பகுதியில் விவசாயியின் தோட்டத்தில் அமைக்கப்பட்ட கிணறு திடீரென உள்வாங்கியதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா செம்போடை வடகாடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தில் உள்ள மா மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச கிணறு ஒன்றை வெட்டினார். நேற்று முன்தினம் இரவு வரை அந்த கிணற்றை பயன்படுத்தியவர் அதிகாலையில் எழுந்து பார்த்த போது கிணற்றைக் காணவில்லை.

இதுகுறித்து விவசாயி கந்தசாமி கூறுகையில், மா மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும் ஊடுபயிராக கடலை சாகுபடிக்கும் தண்ணீர் தேவைப்பட்டது. இதற்காக நான்காண்டு-களுக்கு முன்பு இந்த இடத்தில் கிணறு ஒன்றை வெட்டினேன்.
 
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிலரை அழைத்து வந்து கிணறு அமைத்தேன். 50 ஆயிரம் செங்கற்கள் இதற்கு தேவைப்பட்டது. 20 அடி சுற்றளவும் 22 அடி ஆழமும் கொண்ட இந்த கிணற்றிற்கு அந்த கிணற்றை அமைக்க இரண்டரை லட்ச ரூபாய் செலவு செய்தேன்.
 
தண்ணீரும் நன்றாக ஊறியது.அதனை வைத்து சிறப்பாக விவசாயம் செய்து வந்தேன். ஆனால் நேற்று காலை பார்த்தபோது கிணறு பூமிக்குள் உள்வாங்கியிருந்தது.

காரணம் என்னவென்று தெரியவில்லை. மண்ணும் சரிந்துவிட்டது. கிணறு எங்கே போனது என்று தெரியவில்லை. அதற்கு முதல் நாள் இப்பகுதியில் இடி விழுந்து சில வீடுகளில் எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமடைந்தன. 

இடி விழுந்தது தான் கிணறு காணாமல் போனதற்கு காரணமா அல்லது நில நடுக்கமா? வேறு காரணங்களா என்பது தெரியவில்லை. இதுகுறித்து வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளேன் என்றார்.
Tags:    

Similar News