செய்திகள்
மரணம்

கனமழைக்கு மாடி சுவர் இடிந்து வீட்டின் மீது விழுந்தது: இடிபாடுகளில் சிக்கி பாட்டி-பேரன் பலி

Published On 2021-11-01 10:19 GMT   |   Update On 2021-11-01 10:19 GMT
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கனமழைக்கு மாடி சுவர் இடிந்து வீட்டின் மீது விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பாட்டி மற்றும் பேரன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடை வீதி அருகேயுள்ள தேவாங்கர் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். அங்குள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் 2 பேருக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில் கடைசி மகன் அஜித்குமார் (வயது 25) ஐ.டி.ஐ. படித்துவிட்டு எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

அவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்தார். மகனின் காதலை ஏற்றுக்கொண்ட ஆறுமுகம் வருகிற 15-ந்தேதி திருமணம் நடத்தவும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே அரியலூர் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகள் குளம் போல் மாறியுள்ளன.

இந்த நிலையில் ஆறுமுகத்தின் தாய் லெட்சுமி அம்மாள் (67) அங்குள்ள ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். அதன் அருகிலேயே சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான வீடும் அமைந்துள்ளது. அவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் சிமெண்டால் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி அமைத்திருந்தார்.

நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய அஜித் குமார் தனது பாட்டில் வீட்டில் தூங்கினார். கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் தண்ணீர் தொட்டிக்கு அருகிலிருந்த சுவர் மிகவும் பலமிழந்து காணப்பட்டது. இன்று அதிகாலை சுமார் 2.15 மணியளவில் அந்த பகுதியில் பயங்கர சத்தத்துடன் இடி விழுந்தது.

இதில் தண்ணீர் தொட்டியுடன் சுற்றுச்சுவர் இடிந்து பக்கவாட்டில் உள்ள ஓட்டு வீட்டின் மீது சரிந்து விழுந்தது. அப்போது வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த லெட்சுமி அம்மாள், அவரது பேரன் அஜித்குமார் ஆகிய இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரையும் மீட்ட போது அவர் பலியாகி இருந்தனர். பின்னர் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் தனது பாட்டியுடன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News