செய்திகள்
பணம் திருட்டு

ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு பணம் ரூ.52 ஆயிரத்தை திருடியது யார்?

Published On 2020-01-10 09:48 GMT   |   Update On 2020-01-10 09:48 GMT
சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்தபோது ரூ.52 ஆயிரம் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் ரேசன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ. 1000 ரொக்கப்பணமும் வழங்கப்பட்டு வருகிறது.

சேலம் கிச்சிப்பாளையம் திருநாவுக்கரசு தெருவில் ஒரு ரேசன் கடை செயல்பட்டு வருகிறது. இதில் விற்பனை பிரதிநிதியாக சிவானந்தம் (வயது 35) என்பவர் பணியாற்றி வருகிறார். ரேசன் கார்டுதாரர்களுக்கு கொடுப்பதற்காக அலுவலகத்தில் இருந்து ரூ. 6 லட்சத்தை வாங்கி வந்தார்.

நேற்று காலை முதலே ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசை வழங்கிய அவர் மதியம் அதனை நிறுத்தி விட்டு அங்கேயே சாப்பிட்டார். மீண்டும் பொங்கல் பரிசு வினியோகம் செய்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் ரூபாய் மாயமாகி இருந்தது. மேலும் ஒரு கட்டில் 50 ஆயிரத்திற்கு பதிலாக 48 ஆயிரம் மட்டுமே இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவானந்தம் கதறி அழுதார். மேலும் பொங்கல் பரிசு வினியோகமும் நிறுத்தப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

ரேசன் கடையின் வெளிப்பகுதியில் உள்ள கேமரா பதிவை வைத்து சந்தேகப்படும் படியாக யாராவது வந்தார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையே கூட்டுறவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் மாயமான பணத்திற்கு இணையாக பணத்தை கொடுத்து அனுப்பியதால் மீண்டும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுடன் பணம் வினியோகிக்கப்பட்டது.

ஆனாலும் இன்று காலை வரை ரேசன் கடை ஊழியர் சிவானந்தம் போலீசில் புகார் கொடுக்கவில்லை. இதனால் போலீசார் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News