செய்திகள்
கணவர், குழந்தையுடன் பரிசு பெற்ற லேகா.

கேரளாவில் வறுமையில் வாடிய பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

Published On 2019-11-08 05:41 GMT   |   Update On 2019-11-08 05:41 GMT
கேரளாவில் வறுமையில் வாடிய பெண் ஒருவர் குலுக்கலுக்கு 2 நிமிடம் முன்பு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.60 லட்சம் முதல் பரிசு விழுந்துள்ளது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தெற்கே ஆரியநாடு பகுதியை சேர்ந்தவர் லேகா (வயது 30). இவரது கணவர் பெயர் பிரகாஷ். இந்த தம்பதிக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். லாரி டிரைவரான பிரகாஷ் விபத்தில் சிக்கியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு லாரி ஓட்ட செல்ல முடியாத நிலையில் உள்ளார். இதனால் குடும்பம் வறுமையில் வாடியது.

இதைத்தொடர்ந்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று லேகா காலத்தை கடத்தி வந்தார். இந்த நிலையில் கொம்மாடி பகுதியில் உள்ள ஒரு லாட்டரிக்கடையில் கேரள அரசு லாட்டரிச்சீட்டுகளை நேற்று முன்தினம் பகல் 2.58 மணிக்கு லேகா வாங்கினார். அவர் மொத்தம் 12 லாட்டரிச் சீட்டுகளை வாங்கியிருந்தார்.

பகல் 3 மணிக்கு அந்த லாட்டரிச்சீட்டுகளுக்கான குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் பரிசு ரூ.60 லட்சம் லேகா வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு கிடைத்தது. பரிசு கிடைத்தது பற்றி லேகா கூறியதாவது:-

நான் ஏற்கனவே ஆலப்புழா கலெக்டர் அலுவலகம் அருகில் லாட்டரிச்சீட்டுகள் விற்பனை செய்துவந்தேன். எனது கணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் லாட்டரி விற்பனை செய்ய முடியவில்லை. தற்போது கிடைத்துள்ள பரிசுப்பணம் மூலம் சிறிய வீடு கட்டுவேன். மீண்டும் லாட்டரிச்சீட்டு வியாபாரத்தில் ஈடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News