உள்ளூர் செய்திகள்
பண மோசடி

லாபத்தொகை தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.5.60 கோடி மோசடி - 4 பேர் மீது வழக்கு

Published On 2021-12-08 09:48 GMT   |   Update On 2021-12-08 09:48 GMT
தொழிலில் பங்குதாரராக இணைந்தால் லாபத் தொகை தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.5 கோடியே 60 லட்சம் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பழைய மத்திகிரியை சேர்ந்தவர் மேகநாதன். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 46). இவருடன், அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் மற்றும் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வந்த ரவிச்சந்திரன் குடும்பத்தினர் பழகி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ரவிச்சந்திரன் தனது தொழிலில் பங்குதாரராக சேர்ந்தால் வரும் லாபத்தில் பங்கு தொகை தருவதாக ஜெயலட்சுமியிடம் கூறினார். அதை நம்பி ஜெயலட்சுமி ரூ.50 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதில் ரவிச்சந்திரன் அவருக்கு லாபத்தில் பங்கு அளித்தார்.

இதையடுத்து ரவிச்சந்திரன் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறி பணம் பெற்று கொடுத்தால் லாபத்தில் பங்கு தருகிறேன் என கூறியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து ஜெயலட்சுமி தனக்கு தெரிந்தவர்களிடம் வங்கி பண பரிவர்த்தனை மூலமாக ரூ.5 கோடியே 60 லட்சம் பெற்று கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட ரவிச்சந்திரன் அதன் பிறகு லாபத்தில் சரிவர பணம் கொடுக்க வில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் ரவிச்சந்திரன் தனது குடும்பத்துடன் மாயமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெயலட்சுமி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரமூர்த்தி விசாரணை நடத்தி ரவிச்சந்திரன், அவருடைய மனைவி லதா, மகன் ராகுல் மற்றும் சுபாஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.
Tags:    

Similar News