ஆன்மிகம்
திருவாரூர் ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளதையொட்டி தேர்களில் அலங்கார வேலைப்பாடு பணிகள் நடப்பதை காணலாம்.

திருவாரூரில் வருகிற 25-ந்தேதி நடக்கிறது தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்டம்

Published On 2021-03-23 07:56 GMT   |   Update On 2021-03-23 07:56 GMT
சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜர் கோவில் தேரோட்டம் வருகிற 25-ந்தேதி நடக்கிறது. 450 டன் எடையுள்ள 96 அடி உயர தேரினை இழுக்க 15 டன் எடை கொண்ட வடக்கயிறு கட்டப்பட்டுள்ளது.
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம் வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது.

“ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே” என திருநாவுக்கரசரும், “தேராரூம் நெடுவீதி திருவாரூர்” என சேக்கிழாரும் பாடிய சிறப்பு மிக்கது திருவாரூர் ஆழித்தேராகும். திருவாரூரில் வீற்றிருக்கும் தியாகராஜர் ஆலயம் சைவ சமய மரபில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோவில் சைவ சமயத்திற்கே பெரிய பீடமாய் விளங்குவது மட்டுமல்லாமல் பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி அளிப்பது ஆகும். பஞ்ச பூத தலங்களில் பூமிக்குரிய தலமாக விளங்கும் இக்கோவில் சனீஸ்வரனும், நளனும் வணங்கி சாபம் போக்கியதன் மூலம் சர்வதோ‌ஷ பரிகாரதலமாகவும் விளங்குகிறது.

இக்கோவில் ஆழித்தேர் ஆசியாவிலேயே பெரிய தேராக விளங்குகிறது. திருவாரூர் தேரோட்ட திருவிழாவினை திருநாவுக் கரசரும் திருஞான சம்பந்தரும் வந்து தங்கி தேரோட்ட ஏற்பாடுகளை பார்ப்பதாகவும் இத்தேரினை இந்திரன் முதலான தேவர்கள் வான்நின்று வணங்கி மகிழ்வதாக ஐதீகம்.

இத்தகைய சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜர் கோவில் தேரோட்டம் வருகிற 25-ந்தேதி நடக்கிறது. காலை 6 மணிக்கு தியாகராஜருக்கும் தேருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தேரோட்டம் நடக்கிறது.

தேரோட்டத்தினை முன்னிட்டு கோவிலின் தேவாசிரிய மண்டபத்தில் இருந்து தியாகராஜர் கடந்த புறப்பட்டு அஜபா நடனத்துடன் நகர்வலமாக வந்து திருத்தேர் ஏறுகிறார். தியாகராஜர் ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக ராஜ வீதிகளில் நடைபெறுகிறது.

தேரோட்டம் காண ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் வருவார்கள் என்பதால் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருவாரூர் தியாராஜர் தேரானது மூன்றாவது முறையாக உருவாக்கப்பட்டது. இத்தேர் பீடம் உயர்ரக மரங்களால் 36 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் மீது மூங்கில் மற்றும் பனஞ்சப்பைகளால் 60 அடி உயரத்திற்கு கோபுரம் எழுப்பப்பட்டு 96 அடி உயர தேராக காட்சி அளிக்கும். தேர் கோபுரத்தினை சுற்றி சுமார் 5 டன் எடையுள்ள வண்ணத்துணிகள் கொண்டு அலங்கரிக்கப்படும்.

அலங்கரிக்கப்பட்ட தேரின் மொத்த எடை 450 டன் என கூறப்படுகிறது. 450 டன் எடையுள்ள 96 அடி உயர தேரினை இழுக்க 15 டன் எடை கொண்ட வடக்கயிறு கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வடக்கயிறின் நீளம் சுமார் 1 கி.மீ. தூரமாகும்.

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா கூறியிருப்பதாவது:-

ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளதை யொட்டி 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 10 வயதுக்குட்பட்டவர்கள் தேரோட்டத்திற்கு வருவதை தவிர்க்கவும். மேலும் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி உடையவர்கள் கண்டிப்பாக வீடுகளில் தனிமைபடுத்திக் கொள்ளவும்.

பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறும் முன் முகக்கவசம் அணிந்து வரவும்.

வழிகாட்டு நெறிமுறைகள் அமுலில் உள்ளதால் அதிகமான மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
Tags:    

Similar News