ஆன்மிகம்
முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், சரஸ்வதி

நவராத்திரி விழாவில் பங்கேற்க புறப்படும் சாமி சிலைகள்

Published On 2021-09-30 05:54 GMT   |   Update On 2021-09-30 05:54 GMT
திருவிதாங்கூர் சமஸ்தான அரண்மனை பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டதும், 18-ம் நூற்றாண்டில் இருந்து தற்போது வரை நவராத்திரி விழா திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது.
பாரத நாட்டின் பாரம்பரியத்தை அடையாளமாக கொண்டதுதான் விழாக்கள். தேசம் பரந்து விரிந்து இருந்தாலும் அனைவரது கலாசாரமும் ஒன்றுதான் என்பதை பிரதிபலிக்கும் அடையாளங்கள் ஆங்காங்கே பரவிக்கிடப்பதை எப்போதும் நாம் பார்க்க முடியும்.

அதிலும் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொடரும் ஆன்மிக விழா என்றால் அதில் அதிக சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட ஒரு ஆன்மிக திருவிழா, குமரி மாவட்டத்தையும் கேரள மாநிலத்தையும் தொடர்பு படுத்தி இன்றளவும் நடந்து கொண்டு இருப்பது தனிச்சிறப்பு என்றால் மிகையாகாது. அது மக்களின் வரவேற்பை பெற்றிருப்பது வரலாற்றின் சிறப்பம்சம் ஆகும்.

பத்மநாபபுரம் அரண்மனை

மன்னராட்சி காலத்தில் குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இணைந்து இருந்தது. 14-ம் நூற்றாண்டில் திருப்பாப்பூர் முப்பன் என்ற மன்னன் களிமண்ணால் பத்மநாபபுரத்தில் ஒரு அரண்மனையை கட்டினார். அதன்பின்னர் மன்னர் ரவி குலசேகர பெருமாள் இந்த அரண்மனையை வேணாட்டின் தலைநகரமாக ஆக்கிக்கொண்டார். அதை தொடர்ந்து 18-ம் நூற்றாண்டில் மன்னர் அனுஷம் திருநாள் மார்த்தாண்டவர்மா தற்போதுள்ள பத்மநாபபுரம் அரண்மனையை கலை நுட்பத்துடன் கட்டினார். அங்கிருந்து மன்னர் ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வந்தார்.

அன்றைய கால கட்டத்தில் அம்மனுக்கு உகந்த நவராத்திரி விழாவை மன்னர்கள் மட்டுமே கொண்டாடி வந்ததாக கூறப்படுகிறது. இந்த விழாக்களை மராட்டியம் மற்றும் மேற்கு வங்கம், கர்நாடகா (மைசூர் அரண்மனை) போன்ற மாநிலங்களில் அக்கால மன்னர்கள் சீரும், சிறப்புமாக கொண்டாடி உள்ளனர். அதனால்தான் வடமாநிலங்களில் தசரா இன்னமும் பிரசித்தி பெற்ற விழாவாக நடைபெற்று வருகிறது.

பத்மநாபசாமி என அழைக்கக்கூடிய பெருமாள் மீதும், கிருஷ்ணர் மீதும் திருவிதாங்கூர் மன்னர்கள் மிகுந்த பக்தியும், பற்றும் கொண்டவர்கள் என்பதில் எள்முனை அளவும் சந்தேகமில்லை. அதற்கு அவர்கள் தினந்தோறும் வழிபாடு செய்த திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலும், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுமே சான்று. அது மட்டுமின்றி தாங்கள் சமஸ்தான ஆட்சியில் இருந்தபோதிலும், பத்மநாபசாமிதான் ஆட்சி செய்வதாகவும், அவருடைய பிரதிநிதியாக இருந்து ஆட்சி நிர்வாகத்தை கவனித்து வருவதாகவும் கூறி அக்கால மன்னர்கள் ஆட்சிபுரிந்துள்ளனர். அதனால்தான் அவர்கள் தங்களது பெயருக்கு முன்பு பத்மநாபதாச என்ற அடைமொழியை சேர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

நவராத்திரி விழா

இறைபக்தியில் சிறந்து விளங்கிய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் நவராத்திரி விழாவையும் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். இதற்காக பத்மநாபபுரம் அரண்மனையின் ஒரு பகுதியில் நவராத்திரி மண்டபத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த மண்டபம் அக்கால கட்டிடக்கலை நுணுக்கத்துக்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது. அதில் உள்ள கல் சிற்ப வேலைப்பாடுகள், இன்றும் பளபளக்கும் வகையில் காட்சியளிக்கும் கருந்தளம் ஆகியவை மன்னர்கள் கலைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள் என்பதை பறைசாற்றுவதாக உள்ளது. அந்த மண்டபத்துக்கு முன்புறம் சரஸ்வதி கோவிலும் அமைந்துள்ளது.

இந்த கோவிலில்தான் 10 நாள் நவராத்திரி பூஜைகள் நடந்துள்ளது. நவராத்திரி மண்டபத்தில் நடனம் உள்ளிட்ட சமஸ்தானத்தின் கலை மற்றும் கலாசார நிகழ்வுகள் நடந்துள்ளன. இந்த விழாவுக்காக அந்த காலத்திலேயே சுசீந்திரத்தில் உள்ள முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் (குமாரகோவில் குமாரசுவாமி கோவில்) ஆகிய சாமி சிலைகளை ஊர்வலமாக பத்மநாபபுரம் அரண்மனைக்கு எடுத்துச் சென்று அங்குள்ள சரஸ்வதி அம்மன் கோவிலில் வைத்து நவராத்திரி விழா பூஜைகளை நடத்தியுள்ளனர்.

சாமி சிலைகள் ஊர்வலம்

பின்னர் திருவிதாங்கூர் சமஸ்தான அரண்மனை பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டதும், 18-ம் நூற்றாண்டில் இருந்து தற்போது வரை நவராத்திரி விழா திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இதற்காக குமரி மாவட்டத்தின் சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மனும், குமாரகோவிலில் இருந்து வேளிமலை முருகனும், பத்மநாபபுரம் அரண்மனை அருகில் தற்போது தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மனும் என 3 சாமி சிலைகள் ஆண்டுதோறும் நவராத்திரி விழா தொடங்குவதற்கு முன்பு திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த சாமி சிலைகளுக்கு முன்பு மன்னர் உடன் செல்வதை குறிக்கும் வகையில் மன்னர் மார்த்தாண்டவர்மா பயன்படுத்திய உடைவாளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கையில் தாங்கி பிடித்தபடி செல்வார். சாமி சிலைகள் ஊர்வலத்தில் மன்னர் மார்த்தாண்ட வர்மா உடன் வருவதாகக் கருதி, அவருடைய வாள் அவருடைய பிரதிநிதிகளால் கொண்டு செல்லப்படுகிறது என்று கேரள மாநில அதிகாரிகளால் கூறப்படுகிறது. திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையைச் சேர்ந்த மன்னர் குடும்பத்தினர் அந்த வாளை பெற்று பத்மநாபசாமி கோவில் அருகில் உள்ள நவராத்திரி விழா நடைபெறும் நவராத்திரி மண்டபத்தில் பூஜைக்கு வைப்பார்கள். அதாவது நவராத்திரி விழாவுக்கு 3 நாட்களுக்கு முன்பு சுசீந்திரத்தில் இருந்து தமிழக -கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி தொடங்கும். இந்த ஊர்வலத்தின்போது தமிழகம் மற்றும் கேரள மாநில போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள். அன்று மாலை பத்மநாபபுரத்தில் உள்ள நீலகண்டசாமி கோவிலில் முன்னுதித்த நங்கை அம்மன் சாமி சிலை வைக்கப்படும். மறுநாள் காலை அங்கிருந்து முன்னுதித்த நங்கை அம்மனும், குமாரகோவிலில் இருந்து வேளிமலை முருகன் சாமி சிலையும் புறப்பட்டு பத்மநாபபுரம் அரண்மனையை சென்றடையும்.

வரவேற்பு

பத்மநாபபுரம் அரண்மனையின் 4-வது தளத்தில் உள்ள உப்பரிகை மாளிகையில் உள்ள பூஜை அறையில் பாதுகாக்கப்படும் மார்த்தாண்டவர்மா மன்னரின் உடைவாள் கேரள மாநில அறநிலையத்துறை மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறை மந்திரிகள் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அதைத்தொடர்ந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய 3 சாமி சிலைகளும் திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்லும். கேரள மாநில போலீசார் அணிவகுப்புடன், பேண்டு வாத்தியம் முழங்க சாமி சிலைகளின் ஊர்வலம் தொடங்கும். அன்று இரவு குழித்துறை மகாதேவர் கோவிலில் 3 சாமி சிலைகளும் வைக்கப்படும்.

மறுநாள் காலையில் அங்கிருந்து சாமி சிலைகள் புறப்படும். குமரி- கேரள எல்லையான களியக்காவிளையில் கேரள மாநில அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படும். இதில் அம்மாநில அரசின் வருவாய்த்துறை, காவல்துறை, தேவசம்போர்டு, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து வரவேற்பு அளிக்கின்றனர். அதன்பிறகு ஊர்வலம் தொடர்கிறது. அன்று மாலை ஊர்வலம் கேரள மாநிலம் நெய்யாற்றங்கரையில் உள்ள கிருஷ்ணன் கோவிலைச் சென்றடைகிறது.

மூலவர் சரஸ்வதி அம்மன்

அங்கிருந்து மறுநாள் காலை புறப்பட்டு திருவனந்தபுரத்தை சாமி சிலைகள் சென்றடைகின்றன. அதில் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலை மட்டுமே மூலவர் சாமி சிலையாக கருதப்படுகிறது. அந்த சிலை மட்டும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பகுதியில் உள்ள கோட்டைக்ககம் நவராத்திரி மண்டபத்தில் 10 நாட்களும் பூஜைக்காக வைக்கப்படுகிறது. வேளிமலை முருகன் சிலை ஆரியசாலையில் உள்ள தேவி கோவிலிலும், முன்னுதித்த நங்கை அம்மன் சிலை செந்திட்ட அம்மன் கோவிலிலும் நவராத்திரி பூஜைக்கு வைக்கப்படுகின்றன. நவராத்திரி விழாவின் இறுதிநாளில் வேளிமலை முருகன் பரிவேட்டைக்குச் சென்று திரும்புவார். அதன்பிறகு அங்கிருந்து 3 சாமி சிலைகளும் புறப்பட்டு குமரி மாவட்டத்தை வந்து சேரும்.

இந்த ஊர்வலத்தின்போது தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சாமி சிலை குமரி மாவட்டத்தில் இருந்து யானை மீது பவனியாகச் செல்லும். மற்ற இரண்டு சாமி சிலைகளும் பல்லக்கில் வைத்து எடுத்துச் செல்லப்படும். அப்போது மேளதாளங்கள் முழங்க, முத்துக்குடை மரியாதையுடன் கொண்டு செல்லப்படும். வழிநெடுகிலும் பக்தர்கள் திருக்கண் சாத்தி வழிபட அனுமதிக்கப்படுவார்கள்.

உறவுப்பாலம்

ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் சாமி சிலை ஊர்வலத்திலும் சில மாற்றங்களை கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் தமிழக அரசும், கேரள அரசும் கொண்டு வந்துள்ளன. அதன்படி சாமி சிலைகளை பல்லக்கு வாகனத்தில் கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழாவுக்கான சாமி சிலை ஊர்வலம் வருகிற 2-ந் தேதி சுசீந்திரத்தில் இருந்து தொடங்குகிறது. மறுநாளான 3-ந்தேதி பத்மநாபபுரத்தில் இருந்து 3 சாமி சிலைகளும் திருவனந்தபுரத்துக்கு புறப்படுகிறது.

மன்னராட்சி முடிந்து மக்களாட்சி மலர்ந்த நிலையில், ஒரு மாநில (கேரளா) ஆட்சி நிர்வாகத்தில் இருந்த பகுதி மற்றொரு மாநில (தமிழகம்) ஆட்சி நிர்வாகத்துக்கு வந்த பிறகும் பல ஆண்டு காலமாக இந்த சாமி சிலைகளின் ஊர்வலம் தொடர்ந்து நடந்து வருகிறது. இது இரு மாநிலங்களின் உறவுக்கு பாலமாகவும், இரு மாநில மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்றால் அது மிகையில்லை. ஆண்டுகள் கடந்தாலும், ஆட்சியாளர்கள் மாறினாலும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் நவராத்திரி விழா ஆண்டாண்டு காலத்திற்கும் தொடரும் நிகழ்வாக உள்ளது.
Tags:    

Similar News