ஆன்மிகம்
காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

கும்பகோணத்தில் 6 சிவன் கோவில்களில் மாசிமக திருவிழா தொடங்கியது

Published On 2021-02-18 03:51 GMT   |   Update On 2021-02-18 03:51 GMT
கும்பகோணத்தில் உள்ள 6 சிவன் கோவில்களில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோவில்களில் மாசிமக திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி கோவில்களில் விழா பந்தல் அமைக்கப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது.

பின்னர் சாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதையடுத்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. பின்னர் வேத பாராயணம், திருமுறைகள் ஓதப்பட்டு, நாதஸ்வரம் இன்னிசை முழங்க கோவில்களில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..

தொடர்ந்து நேற்றிரவு அதிகும்பேஸ்வரர் கோவிலில் 10 நாதஸ்வர, மேள கலைஞர்களின் இன்னிசை முழக்கத்துடன் பஞ்சமூர்த்திகள் இந்திர விமானத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு வருகிற 20-ந் தேதி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் இருந்து 63 நாயன்மார்கள் வீதியுலாவும், 21-ந் தேதி ஓலைச்சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும். 23-ந் தேதி வெண்ணெய்த்தாழி அலங்காரமும், 24-ந் தேதி காலை தேரோட்டமும் நடைபெற உள்ளது.

25-ந் தேதி மாலை அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், வியாழசோமேஸ்வரர் ஆகிய 4 கோவில்களின் தேரோட்டம் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 26-ந் தேதி மகாமகம் குளத்தில் மதியம் 12.30 மணிக்கு மாசிமக தீர்த்தவாரி நடைபெறுகிறது. அப்போது குளத்தின் நான்கு கரைகளிலும் பக்தர்கள் புனித நீராட உள்ளனர். அந்த நேரத்தில் 12 சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலாவாக புறப்பட்டு மகாமக குளத்தின் கரைகளில் எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கிறது.

இதேபோல் கும்பகோணம் ஆதிவராக பெருமாள், சக்கரபாணி சாமி, ராஜகோபால சாமி உள்ளிட்ட வைணவ கோவில்களில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) காலை விழா கொடியேற்றப்படுகிறது. வருகிற 21-ந் தேதி கருட வாகனங்களில் சாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும், 26-ந் தேதி மாசிமகத்தன்று காலை சக்கரபாணி கோவில் தேரோட்டமும், அதே நாளில் சாரங்கபாணி கோவில் பெருமாள் பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News