உள்ளூர் செய்திகள்
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை.

நெல்லை மாநகராட்சியில் தேர்தல் குறித்து புகார் செய்ய கட்டுப்பாட்டு அறை திறப்பு

Published On 2022-01-28 09:26 GMT   |   Update On 2022-01-28 09:26 GMT
நெல்லை மாநகராட்சி தேர்தல் தொடர்பாக புகார்கள் இருந்தால் தெரிவிப்பதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
நெல்லை:

நெல்லை மாநகராட்சியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் மொத்தம் 4 லட்சத்து 16 ஆயிரத்து 389 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 2,03,879 பேரும், பெண் வாக்காளர்கள் 2,12,473 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 37 பேரும் உள்ளனர்.

இவர்கள் வாக்களிப்பதற்காக நெல்லை மாநகர பகுதியில் மட்டும் 490 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆண்கள் மட்டும் வாக்களிப்பதற்காக 172 வாக்குச்சாவடிகளும், பெண்கள் மட்டும் வாக்களிப்பதற்காக 172 வாக்குசாவடிகளும், இரு பாலரும் சேர்ந்து வாக்களிப்பதற்காக 146 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 591 வாக்குப்பதிவு எந்திரங்களும், 591 கட்டுப்பாட்டு கருவிகளும் என மொத்தம் 1182 வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சி பகுதியில் மட்டும் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கண்டுபிடிக்க ஒரு மண்டலத்திற்கு ஒரு பறக்கும் படை வீதம் 4 மண்டலத் திற்கும் 4பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர தேர்தல் குறித்து புகார்கள் செய்ய நெல்லை மாநகராட்சியில் 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.  இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 1800 425 4656 என்ற இலவச தொலைபேசி எண்ணில்  போன் செய்யலாம்.

 மேலும் 9489930261 எந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம். இதற்காக 24 மணி நேரமும் பணிபுரிய அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாநகராட்சி தேர்தலுக்கான ஏற்பாட்டை மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் செய்து வருகிறார்.

Tags:    

Similar News