செய்திகள்
தென்னம்பாளையம் சந்தையில் விற்பனைக்காகவைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை படத்தில் காணலாம்.

தென்னம்பாளையம் சந்தையில் சின்னவெங்காயம் கிலோ ரூ.90-க்கு விற்பனை

Published On 2021-02-28 23:08 GMT   |   Update On 2021-03-01 11:12 GMT
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.90-க்கு விற்கப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் தென்னம்பாளையத்தில் காய்கறி மற்றும் இறைச்சி, மீன் சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு செல்கிற பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இதுபோல் இங்கு ஏராளமான சில்லரை மற்றும் மொத்த வியாபாரி பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காய கடைகளும் செயல்பட்டு வருகின்றன.

இவ்வாறு வெங்காய விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்து கொண்டிருந்தது. இதனால் இல்லத்தரசிகள் மிகவும் கவலையடைந்தபடி இருந்தனர். சமையலில் முக்கிய பங்கு வகிப்பது வெங்காயம் என்பதால், இதன் தேவையும் அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சின்ன வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது.

இது குறித்து வெங்காய வியாபாரிகள் கூறியதாவது:-

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் பெரியவெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தை ஏராளமான வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறோம். வெங்காயத்தின் வரத்து குறைவின் காரணமாக கடந்த சில நாட்களாக விலை அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக இதன் விலையும் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் சின்ன வெங்காயம் கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று ரூ.20 குறைந்து, ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுபோல் கடந்த சில நாட்களாகவே சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிகவும் முக்கிய பொருளான கறிவேப்பிலை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ கறிவேப்பிலை தென்னம்பாளையம் சந்தையில் ரூ.100-க்குவிற்பனை செய்யப்பட்டு வருகிறது. பனியின் காரணமாக கறிவேப்பிலை வரத்து குறைவாக இருந்ததால், இந்த விலை உயர்வு இருந்தது.

இந்நிலையில் தற்போது பனியின் தாக்கம் குறைய தொடங்கியுள்ளதால், கறிவேப்பிலையின் வரத்தும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இன்னும் சில நாட்களில் கறிவேப்பிலை விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ கறிவேப்பிலை இன்று (திங்கட்கிழமை) முதல் கிலோவுக்கு ரூ.80-க்கு விற்பனை செய்யப்படும் வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News