செய்திகள்
சசிகலா,

சசிகலாவுக்கு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கண்டனம்

Published On 2021-07-03 06:23 GMT   |   Update On 2021-07-03 06:32 GMT
எம்.ஜி.ஆரின் பெயரை இழுத்து சசிகலா தவறான வி‌ஷயத்தை தொட்டிருக்கிறார் என எம்.ஜி.ஆரின் ரசிகரும், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யுமான கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை:

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த சசிகலா தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்த பிறகு மீண்டும் தனது அரசியல் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார். தினமும் அவர் தனது ஆதரவாளர்களுக்கு போன் செய்து அவர்களிடம் பேசியதை ஆடியோவாக வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த ராமசாமி என்பவரிடம் சசிகலா பேசிய ஆடியோவில், ‘மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு நான் ஆலோசனைகள் கூறி இருக்கிறேன். கட்சி தொடர்பாக என்னிடம் எம்.ஜி.ஆர். கருத்து கேட்பார்.

நான் சொல்லும் கருத்துக்களை எம்.ஜி.ஆர். பொறுமையாக கேட்பார். எம்.ஜி.ஆர் பேசும் போது எப்படியெல்லாம் பேசினால் நன்றாக இருக்கும் என்று நான் அறிவுரை வழங்கி இருக்கிறேன். இது பலருக்கும் தெரியாது’ என்று பேசி இருக்கிறார்.

சசிகலாவின் இந்த பேச்சு அ.தி.மு.க.வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக எம்.ஜி. ஆர். ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்.ஜி.ஆர். பற்றி கருத்து தெரிவித்த சசிகலாவுக்கு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் இணைய தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பான மீம்ஸ்களையும் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் இணைய தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக எம்.ஜி.ஆரின் ரசிகரும், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யுமான கே.சி.பழனிசாமி கூறியதாவது:-


அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரின் பெயரை இழுத்து சசிகலா தவறான வி‌ஷயத்தை தொட்டிருக்கிறார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள் இதை ஜீரணிக்க மாட்டார்கள். அரசியல் விவரங்கள் குறித்து எம்.ஜி. ஆருக்கு ஆலோசனை வழங்கியதாக சசிகலா கூறியது நகைச்சுவையானது.

அ.தி.மு.க.வில் மீண்டும் சேர சசிகலாவுக்கு உரிமை உண்டு. ஆனால் அவர் எம்.ஜி.ஆருக்கு அறிவுறுத்தியது, ஜெயலலிதாவுக்கு வழிகாட்டியது போன்று பேசுவது எம்.ஜி.ஆர். ரசிகர்களை எரிச்சல் அடைய செய்யும். பொய்களை சொல்லும் போது அவர்களின் வரம்பை ஒருவர் அறிந்துகொள்ள வேண்டும்.

சசிகலா தனது ஆதரவாளர்களுடன் எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா பற்றி பேசுவது அ.தி.மு.க. தொண்டர்கள் இடையே கடுமையான விமர்சனத்தை உருவாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்...ரெயில்கள் இயக்கப்படாததால் சென்னை ரெயில்வேக்கு இத்தனை கோடி இழப்பா?

Tags:    

Similar News