செய்திகள்
பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடு.

வேலூர் அருகே 13 வீடுகள் பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது

Published On 2021-11-22 09:32 GMT   |   Update On 2021-11-22 09:32 GMT
வீட்டில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் மிதந்தபடி சென்றன. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் அங்கு ஓடிச் சென்று பார்த்தனர்.

வேலூர்:

ஆந்திரா- தமிழகத்தில் பெய்த கனமழையால் பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது. வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, காவேரிப்பாக்கம் வழியாக பாலாற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.

வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே உள்ள வட விரிஞ்சிபுரம் காமராஜபுரத்தில் 191 வீடுகள் உள்ளன. இதில் பாலாற்றங்கரையில் வலது பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கூட தெருவில் ஆற்றின் கரையோரமாக 28 வீடுகள் இருந்தன. இவற்றில் 130-க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.

கடந்த 17-ந்தேதி முதல் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த தெருவில் வசித்து வரும் பொதுமக்கள் அனைவரையும் வருவாய்த் துறையினர் வெளியேற்றினர். அவர்கள் வட விரிஞ்சிபுரம் வேளாண் விரிவாக்க மையம் மற்றும் வடுகன்தாங்கல் உயர்நிலைப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் நேற்று காலை முதல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகளவில் ஏற்பட்டது. இதில் ஆற்றங்கரையோரம் கட்டப்பட்டிருந்த 28 வீடுகளில் 12 வீடுகள் மண் அரிப்பால் அடுத்தடுத்து சரிந்து ஆற்றுக்குள் விழுந்தன. இன்று காலையில் மேலும் ஒரு வீடு இடிந்து விழுந்தது. 13 வீடுகள் ஆற்றுக்குள் இடிந்து விழுந்ததால் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆற்றுக்குள் விழுந்த வீடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது.

வீட்டில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் மிதந்தபடி சென்றன. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் அங்கு ஓடிச் சென்று பார்த்தனர்.

தங்களின் வீடுகள் எல்லாம் தங்கள் கண் முன்பாகவே இடிந்து விழுந்தது கண்டு பொதுமக்கள் அழுது துடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி காட்பாடி டி.எஸ்.பி. பழனி, தாசில்தார் சரண்யா மற்றும் கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

அந்த ஊரில் வசிக்கும் அனைவருக்கும் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

பள்ளிக்கூடத் தெருவில் மீதம் உள்ள வீடுகளில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி கொண்டு உறவினர்கள் வீடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர். தொடர்ந்து ஆற்றங்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதனால் மீதமுள்ள 15 வீடுகளும் இடிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இடிந்து விழும் நிலையில் உள்ள ஒரு வீடு ரூ.40 லட்சம் செலவில் சமீபத்தில் தான் கட்டப்பட்டது. ஒரு வாரத்தில் கிரகப்பிரவேசம் நடத்த உள்ளதாக அந்த பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்... ஆந்திராவில் பெய்த கனமழையால் விஜயவாடா- சென்னை சாலையில் பாலம் துண்டிப்பு

Tags:    

Similar News