குழந்தை பராமரிப்பு
குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடும் போது செய்யும் தவறுகள்...

குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடும் போது செய்யும் தவறுகள்...

Published On 2021-12-24 08:35 GMT   |   Update On 2021-12-24 08:35 GMT
ஒப்பீடு என்பது எப்படி இருக்கக் கூடாது என்பதை நேரடியாகவே மறைமுகமாகவோ சொல்வது, முன்மாதிரி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது.
ஒரு குழந்தையை மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் இரண்டு விசயங்கள் நடக்கின்றன. ஒன்று அவரைப் போல தான் இல்லையே எனும் தாழ்வு மனப்பான்மை. அடுத்து, ஒப்பீடாக இருப்பவர்மீது உருவாகும் வெறுப்பு. இவை இரண்டுமே உங்கள் பிள்ளையின் மனநிலையைச் சிதைக்கக்கூடியவைதான். தாழ்வு மனப்பான்மை தன்னை மற்றவர்களிடமிருந்து விலகச் செய்துகொண்டு தனிமையைக் கொடுத்துவிடும். வெறுப்பு என்பது அடுத்தவர்மீது வன்முறையைப் பிரயோகிக்கும் அளவுக்கு மாற்றிவிடும். எனவே, ஒருவரோடு ஒப்பிட்டு உங்கள் குழந்தையின் பழக்கத்தை மாற்ற முடியாது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

தவறு செய்வது என்பது தவிர்க்கவே முடியாத இயல்பு. தவறு செய்யும் குழந்தையை, மற்றவரின் செய்கையோடு இணைத்து ஒப்பிட்டுப் பேசுகிறோம். இதை நமது குழந்தையின் செயலைத் திருத்துவதற்கு எனச் செய்கிறோம். ஆனால், நாம் முன்பு சொன்னதுபோலப் தாழ்வு மனப்பான்மையும் வெறுப்பும் நமது குழந்தையின் திறமைகளை மழுங்கடித்துவிடும். அதே சமயம் ஒருவரை ரோல் மாடாக முன்னிறுத்தும்போது அது நம் குழந்தை செய்யும் தவற்றைத் திருத்தும் நோக்கில் நாம் சொல்லவில்லை. அதனால் குழந்தையும் அதேபோல யோசிக்காது.

கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள பிள்ளையிடம் சச்சினை ரோல் மாடலாகச் சொல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். சச்சின் வளர்ந்த சூழல், பயிற்சியில் காட்டிய அக்கறை, தோல்வியில் துவண்டுவிடாமல் போராடியது, விமர்சனங்களைக் கண்டு அஞ்சாமல் களமிறங்கியது.... உள்ளிட்ட பல விஷயங்களைச் சொல்வோம். அப்படிச் சொல்லும்போது அவரோடு உங்கள் குழந்தையை ஆங்காங்கே ஒப்பிடத்தான் செய்வீர்கள். ஆனாலும், தான் ஆர்வத்துடன் இருக்கும் துறையில் சாதித்த ஒருவரைப் பற்றிச் சொல்லும்போதும் ஒப்பிடும்போதும் அதை நெகட்டிவ் விஷயமாகக் கருதுவதற்கு வாய்ப்பில்லை.

ரோல் மாடல்களைப் பற்றிக் கூறும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவரை எதன் நோக்கில் பின்பற்றச் சொல்கிறோம். அதை மட்டும் கவனிக்க உங்கள் குழந்தையைப் பழக்க வேண்டும். அவரின் தனி மனித விஷயங்களில் சில முரண்பட்டவை இருக்கலாம். அவற்றைக் கழித்துவிடவும் குழந்தைகளிடம் கூற வேண்டும். இல்லையெனில் அவரை ஜெராக்ஸ் எடுக்கத் தொடங்கிவிடுவர். அதனால் கவனத்துடன் இருக்க வேண்டும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒப்பீடு என்பது எப்படி இருக்கக் கூடாது என்பதை நேரடியாகவே மறைமுகமாகவோ சொல்வது, முன்மாதிரி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது. திட்டமிட்டு முன்நகரச் செய்வது. இந்த வேறுபாட்டை பெரியவர்களை விட குழந்தைகள் மிக விரைவாகப் புரிந்துகொள்வார்கள். எனவே, நாம் கூடுதல் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம்.
Tags:    

Similar News