ஆன்மிகம்
திருப்பதி கோவில் அருகே ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம்

திருப்பதி கோவில் அருகே ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம்

Published On 2021-01-29 09:03 GMT   |   Update On 2021-01-29 09:03 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள ஸ்ரீராமகிருஷ்ண தீர்த்தத்தில் முக்கோட்டி உற்சவம் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்தது. அங்குள்ள ஸ்ரீராமர், கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.
திருமலை

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே 6 கிலோ மீட்டர் தூரத்தில் சேஷாசலம் வனப்பகுதியில் ஸ்ரீராமகிருஷ்ண தீர்த்தம் உள்ளது. அங்கு ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற முனிவர் மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார். அவரின் தவத்தை மெச்சிய மகாவிஷ்ணு, தெலுங்கு புஷ்யமி மாதத்தில் புஷ்யமி நட்சத்திரத்தில் (தை மாதம் பவுர்ணமியுடன் கூடிய பூச நட்சத்திரத்தில்) முனிவர் முன் தோன்றி அருள்பாலித்தார்.

அப்போது முனிவர், தங்களை நினைத்து தவத்தில் ஈடுபடுவதற்கு முன்பு புனித நீராட தீர்த்தம் ஒன்றை உருவாக்கி தர வேண்டும் கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக் கொண்டபடியே மகாவிஷ்ணு சேஷாசலம் வனப்பகுதியில் அடர்ந்த காட்டின் நடுவே தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார். அதுவே ஸ்ரீராமகிருஷ்ண தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

இந்தத் தீர்த்தத்தில் தை மாதம் பவுர்ணமியுடன் கூடிய பூசத்தன்று அனைத்துப் புண்ணியத் தீர்த்தங்களும் வந்து சேருகிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடுபவர்களுக்கு இக, பர சுகம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஸ்ரீராமகிருஷ்ண தீர்த்தத்தில் நேற்று முக்கோட்டி உற்சவம் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்தது. அங்குள்ள ஸ்ரீராமர், கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. அதில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News