செய்திகள்
கோப்புப்படம்

மராட்டியத்தில் 2 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு - அரசு அதிரடி நடவடிக்கை

Published On 2021-02-18 23:07 GMT   |   Update On 2021-02-18 23:07 GMT
மராட்டியத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையொட்டி 2 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கை அரசு அதிரடியாக அமல்படுத்தி உள்ளது.
மும்பை:

கொரோனா பாதிப்பில் முதலிடம் பிடித்த மராட்டியத்தில் படிப்படியாக தொற்று குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. தினசரி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது.

கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த பலர் அதில் இருந்து மீள முயற்சி செய்து கொண்டு இருக்கின்றனர். இந்தநிலையில் மக்களை சோகத்தில் ஆழ்த்தும் விதமாக இந்த மாதம் முதல் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாநிலத்தில் 4 ஆயிரத்து 787 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அன்று 40 பேரின் உயிரையும் கொரோனா குடித்தது. நேற்று அது 5 ஆயிரத்தை தாண்டியது. அதாவது 5 ஆயிரத்து 427 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 38 பேர் உயிரிழந்தனர்.

நகர்ப்புறம் மட்டும் இன்றி கிராமப்புறங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. பொதுமக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி போன்ற நோய் தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் மீண்டும் முழு ஊரடங்கை சந்திக்க நேரிடும் என்று 2 நாட்களுக்கு முன்பு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று காலை அவசர ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் யவத்மால், அமராவதி, அகோலா ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் யவத்மால் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் 10 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் மூடப்படும். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. அதே ேவளையில் கட்டுப் பாடுகளுடன் வழிப்பாட்டு தலங்களில் வழிப்படவும், ஓட்டல்கள் செயல்படவும் அனுமதிக்கப்படுகிறது.

இதேபோல அமராவதி மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

மராட்டியத்தில் 2 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பது மக்களிடையே வாழ்வாதார ரீதியாக பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடைய பொதுமக்களை துரத்தி வரும் கொரோனா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. இந்த மாதம் தொடக்கம் முதல் மராட்டிய மந்திரிகள் அனில் தேஷ்முக், சதேஜ் பாட்டீல், ராஜேந்திர சிங்னே ஆகியோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் நாக்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாநில உள்துறை மந்திரியான அனில் தேஷ்முக் கொரோனாவில் இருந்து மீண்டு கடந்த 15-ந் தேதி வீடு திரும்பினார்.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவரும், மாநில நீர்வளத்துறை மந்திரியுமான ஜெயந்த் பாட்டீலை கொரோனா தாக்கி உள்ளது.  இதன் மூலம் இந்த மாதத்தில் மட்டும் 4 மந்திரிகள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த ஆண்டில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் உள்பட 12-க்கும் மேற்பட்ட மந்திரிகள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தது நினைவுக்கூரத்தக்கது.
Tags:    

Similar News