ஆன்மிகம்
சிதம்பரம் நடராஜர் கோவில்

நாளை மகா சிவராத்திரி விழா: சிதம்பரம் நடராஜருக்கு 4 கால பூஜை

Published On 2021-03-10 09:08 GMT   |   Update On 2021-03-10 09:08 GMT
நாளை மகா சிவாராத்திரி விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறுகிறது. இதில் நடராஜருக்கு 4 கால பூஜை நடைபெற உள்ளது.
உலகப் புகழ்பெற்ற பூலோக கைலாயமான சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில், நாளை(வியாழக்கிழமை) மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.

இதில், சிவ பக்தர்கள் கோவில் வளாகத்தில் இரவு முழுவதும் விழித்திருந்து காலையில் சிவகங்கை குளத்தில் நீராடி சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியை வழிபடுவது வழக்கம்.

அதன்படி நாளை மகாசிவராத்திரி தினவிழாவில், காலை 6 மணிக்கு நடராஜர் கோவில் திறக்கப்படுகிறது. தொடர்ந்து காலை, மாலை இருவேளையும், கால பூஜைகள் முடிந்தவுடன், இரவு ஏக கால லட்சார்ச்சனை வைபவம் நடைபெறுகிறது.

பின்னர் சிவராத்திரி இரவு 12 மணிக்கு முதல்கால பூஜையும், இரவு 2 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் நடைபெறும் லிங்கோத்பவ காலம் பூஜை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கால பூஜையில் பக்தர்கள் சுவாமியை வழிபடுவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். காலை 4 மணிக்கு 3-ம்கால பூஜையும், 6 மணிக்கு 4-ம்கால பூஜையும் நடைபெறும். தொடர்ந்து நடராஜருக்கும் சிவகாம சுந்தரிக்கும் சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனைகள் நடைபெறும்.

தொடர்ந்து மறுநாள் வெள்ளிக்கிழமை 12 மணி வரை நடராஜர் கோவில் திறந்திருக்கும். சிவராத்திரி விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே நடராஜர் கோவிலில் மகாசிவராத்திரி தினத்தன்று ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் நாட்டியாஞ்சலி விழா, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு நடைபெறாது என்று கோவில் பொது தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்க ஒன்றாகும்.
Tags:    

Similar News