செய்திகள்
திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் பட்டியல் நாளை அறிவிப்பு

Published On 2021-03-13 10:41 GMT   |   Update On 2021-03-13 10:41 GMT
விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் பட்டியல் இன்று மாலைக்குள் இறுதி செய்யப்பட்டு நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 4 தனி தொகுதிகளும், 2 பொதுத்தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வானூர், காட்டுமன்னார் கோவில், செய்யூர், அரக்கோணம் ஆகிய தனி தொகுதிகளிலும் நாகப்பட்டினம், திருப்போரூர் பொதுத்தொகுதியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் களம் இறங்குகிறது.

இந்த தொகுதிகளில் போட்டியிட அதிகம் பேர் ஆர்வம் காட்டிய நிலையில் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே சீட் வழங்க கட்சி தலைவர் திருமாவளவன் முடிவு செய்துள்ளார்.

திருப்போரூர் தொகுதியில் போட்டியிட கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜிக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

அதேபோல நாகப்பட்டினம் தொகுதியில் ஆனூர் ஷாநவாசை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செய்யூர் தொகுதிக்கு மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன், பனையூர் பாபு ஆகியோர் வரிந்து கட்டுகிறார்கள். காட்டுமன்னார் கோவில் தொகுதியை பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் கேட்கிறார்.

அந்த தொகுதி ஒதுக்காத பட்சத்தில் வானூர் தொகுதி அவருக்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளது. அரக்கோணம் தொகுதியில் போட்டியிட கட்சியின் தலைமை நிர்வாகிகள் பாலசிங்கம், சேகுவாரே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இது தவிர வேறு சில முக்கிய நிர்வாகிகளும் செய்யூர், அரக்கோணம் தொகுதிக்கு குறி வைக்கிறார்கள். கட்சி தலைவர் திருமாவளவன் வேட்பாளர்களை இறுதி செய்வதில் தீவிரமாக உள்ளார்.

யாரை நிறுத்தினால் சாதகமாக இருக்கும், வேட்பாளரின் சாதக-பாதகம் குறித்து ஆய்வு செய்கிறார். இன்று மாலைக்குள் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News