செய்திகள்
ரசல்

நண்பரை கொன்று புதைத்த தந்தையை கைது செய்ய தகவல் அளித்த கொலையாளியின் மகள்

Published On 2019-11-22 12:10 GMT   |   Update On 2019-11-22 12:10 GMT
அமெரிக்காவில் நண்பரை கொன்று வீட்டின் தரைத்தளத்தில் புதைத்த கொலையாளியின் மகள் அளித்த தகவல் மூலம் போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.
நியூயார்க்: 

அமெரிக்காவின் கொலோராடோ மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ரசல் மோன்டோயோ மற்றும் சேன் நெல்சன். நெருங்கிய நண்பர்களான  இவர்களிடையே ஆடம் கவுண்டியில் உள்ள ரசலின் வீட்டில் கடந்த நவம்பர் 8-ம் தேதி சில விவகாரங்கள் தொடர்பாக கடுமையான  வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரசல் துப்பாக்கியால் நெல்சனை சுட்டார். இதில் நெல்சன் அந்த இடத்திலேயே  உயிரிழந்தார். 

இதையடுத்து, செய்வதறியாது திகைத்த ரசல் அவரது வீட்டின் கீழ்தளத்தில் உள்ள சலவை அறையில் குழிதோண்டி நெல்சனின்  பிரேதத்தை புதைத்தார். சம்பவத்தன்றிரவு உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த ரசலின் மகள் மறுநாள் வீட்டிற்கு திரும்பி வந்தபோது  தந்தை ஒருவித பயத்துடன் இருப்பதை கண்டார்.  

வீட்டின் கீழ்த்தளத்தில் உள்ள தனது அறைக்கு சென்ற அவரது மகள் ஒருவித துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தார். கடுமையான ரசாயன  நாற்றம் மற்றும் படிக்கட்டுகளில் சிவப்பு - பழுப்புநிற கரைகள் இருந்ததை குறித்து தந்தையிடம் வினவினார். 

ஆனால், ரசல் வேறுசில காரணங்களை கூறி மழுப்பினார். ஒருசில தினங்களில் நெல்சன் காணாமல் போன செய்தி தெரியவரவே  தந்தையிடம் அவரைப்பற்றி கேட்டார். 

நெல்சன் கொலைசெய்யப்பட்ட அன்று அவரும் தனது தந்தையும் தங்களது வீட்டில் உரையாடிக்கொண்டிருந்ததை நினைவுகூர்ந்த  ரசலின் மகள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  

இதையடுத்து நெல்சனை கொலை செய்து கிழ்த்தளத்தில் புதைத்து கான்கிரீட் போட்டு பூசியதை ரசல் ஒப்புக்கொண்டார். அவரது மகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர். கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தது உள்ளிட்ட  பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.   

ரசலும் நெல்சனும் 25 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்தும் அவரை ரசல் கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News