செய்திகள்
பட்னாவிஸ் - ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வருமாறு பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு

Published On 2019-11-09 15:11 GMT   |   Update On 2019-11-09 15:11 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க வருமாறு பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிசுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 இடங்களை கொண்ட சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. -105, சிவசேனா-56, தேசியவாத காங்கிரஸ்-54, காங்கிரஸ்-44 இடங்களில் வெற்றி பெற்றன.
 
பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ.க.வும், சிவசேனாவும் ஒன்றுசேர்ந்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா இந்த தடவை முதல்-மந்திரி பதவியை பெற்றுவிட வேண்டும் என்பதற்காக பா.ஜ.க.வுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இதனால் பா.ஜ.க.வுக்கும், சிவசேனாவுக்கும் புதிய அரசு அமைப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

இதற்கிடையே, பா.ஜ.க.வை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரி பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து அளித்தார். அப்போது மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதல்-மந்திரி பதவியில் நீடிக்குமாறு தேவேந்திர பட்னாவிசை ஆளுநர் கேட்டுக்கொண்டார். 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிசுக்கு ஆளுநர் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை வென்ற கட்சி பா.ஜ.க. என்பதால் ஆட்சி அமைக்க தேவேந்திர பட்னாவிஸ்க்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், சட்டசபையில் நவம்பர் 11-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட்டார்.

முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பதில் பாஜக - சிவசேனா இடையே இழுபறி நீடிக்கும் நிலையில்  ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளது மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
Tags:    

Similar News