செய்திகள்
ஹெச் 1 பி விசா

அமெரிக்க பாராளுமன்றத்தில் புதிய குடியேற்ற மசோதா தாக்கல் - லட்சக்கணக்கான இந்தியர்கள் பயனடைவர்

Published On 2021-02-20 01:10 GMT   |   Update On 2021-02-20 01:10 GMT
அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய குடியேற்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நிறைவேறினால் லட்சக்கணக்கான இந்தியர்கள் பயனடைவார்கள்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற ஜோ பைடன், முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய திட்டங்கள் மற்றும் மோசமான கொள்கைகளை அதிரடியாக மாற்றியமைத்து வருகிறார்.

அந்த வகையில் டிரம்ப் கொண்டு வந்த கடுமையான குடியேற்ற கொள்கைகளில் சீர்திருத்தம் செய்து புதிய குடியேற்ற சட்டம் அமல்படுத்தப்படும் என ஜோ பைடன் சூளுரைத்தார். இதுதொடர்பாக அவர் பல நிர்வாக உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் ‘அமெரிக்க குடியுரிமை சட்டம் 2021' என்ற சட்ட மசோதாவை நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது.‌

இந்த குடியேற்ற மசோதாவின் முக்கிய நோக்கம் முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் 1 கோடியே 10 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்குவதாகும்.

அத்துடன் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியுரிமைக்காக வழங்கப்படும் கிரீன் கார்டு வழங்குவதில் உள்ள சிக்கல்களை களைவது மற்றும் எச்1 பி விசாதாரர்களுக்கு பணி அங்கீகாரம் வழங்குவது ஆகியவையும் இந்த மசோதாவின் முக்கிய அம்சமாகும்.

இந்த மசோதா சட்டமானால் அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் லட்சக்கணக்கான இந்தியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயனடைவார்கள். குறிப்பாக, ஐ.டி. எனப்படும் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கு இந்த சட்டம் மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

இந்த மசோதாவை இயற்றிய ஜனநாயகக் கட்சி எம்.பி‌.க்கள் பாப் மெனண்டெஸ் மற்றும் லிண்டா சான்செஸ் ஆகிய இருவரும் மசோதா குறித்து பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ‘‘அமெரிக்க குடியுரிமை சட்டம் 2021, தார்மீக மற்றும் பொருளாதார கட்டாயத்தையும் குடியேற்ற சீர்திருத்தத்தின் விரிவான பார்வையும் உள்ளடக்கியது’’ என்றனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில் ‘‘புலம்பெயர்ந்தோர் நம் நாட்டுக்கும் சமூகத்துக்கும் பெரிதும் பங்களிப்பு செய்கிறார்கள். அவர்கள் வணிகங்களை வைத்திருக்கிறார்கள், வரி செலுத்துகிறார்கள்.
நமது குழந்தைகளுக்கு கற்பிக்கிறார்கள்.‌ அவர்கள் நமது சக ஊழியர்கள், அண்டை நபர்கள் மற்றும் நண்பர்கள் ஆவர். எவரையும் பின்னுக்கு தள்ளாத குடியேற்றத்திற்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்யும் மற்றும் நம் நாட்டின் தேசிய பாதுகாப்பினை பாதுகாக்கும் தைரியமான குடியேற்ற சீர்திருத்தத்தை இறுதியாக செயல்படுத்த நமக்கு ஒரு வரலாற்று வாய்ப்பு உள்ளது. இதை முறைப்படி செய்து முடிக்க நமக்கு தார்மீகப் பொறுப்பு உள்ளது’’ எனக் கூறினர்.

ஆளும் ஜனநாயக கட்சி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையாக உள்ளது. எனினும் பாராளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் இந்த மசோதா நிறைவேறுவதற்கு எதிர்க்கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்த 10 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.

நாட்டில் வாழும் லட்சக்கணக்கான குடிமக்கள் அல்லாதவர்களின் நலனுக்கான இந்த மசோதாவுக்கு தேவையான ஆதரவு கிடைக்கும் என வெள்ளை மாளிகையும், ஜனநாயக கட்சியின் தலைமையும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முந்தைய நிர்வாகத்தின் தவறுகளை நிவர்த்தி செய்வதற்கும் குடியேற்ற முறைக்கு நீதி, மனிதநேயம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுப்பதற்கும் பாராளுமன்றத்தின் தலைவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் இந்த மசோதா குடியேற்ற கொள்கைகளைப் பின்பற்றுவதற்கான முக்கியமான முதல் படியாகும். இது குடும்பங்களை ஒன்றிணைக்கும். நமது பொருளாதாரத்தை வளர்க்கும், மேம்படுத்தும். மற்றும் நமது பாதுகாப்பை பலப்படுத்தும்’’ என தெரிவித்தார்.
Tags:    

Similar News