செய்திகள்
சாலையில் உருண்டு விழுந்த பாறாங்கல்லை அகற்றும் பணி நடந்தபோது எடுத்த படம்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 575 மி.மீ. மழை கொட்டியது

Published On 2020-11-19 07:40 GMT   |   Update On 2020-11-19 07:40 GMT
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 575 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பருவமழை பெய்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் காலையில் தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரை பெய்தது. அதிலும் கொடைக்கானல், வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மழை விடாமல் கொட்டி தீர்த்தது. இதில் அதிகபட்சமாக கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் 94.6 மி.மீ. மழை பதிவானது.

இதேபோல் கொடைக்கானல் போட்கிளப்பில் 76 மி.மீ., வேடசந்தூர் மற்றும் வேடசந்தூர் புகையிலை ஆராய்ச்சி மையம் ஆகியவற்றில் தலா 84 மி.மீ., நத்தத்தில் 52.5 மி.மீ., காமாட்சிபுரத்தில் 46.8 மி.மீ., சத்திரப்பட்டியில் 44.2 மி.மீ., பழனியில் 42 மி.மீ., திண்டுக்கல்லில் 32.2 மி.மீ., நிலக்கோட்டையில் 18.8 மி.மீ. மழை பெய்தது. இதன்மூலம் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 575.1 மி.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பெய்த கன மழையால் புல்லாவெளி அருகே மலைப்பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மலைப்பாதையில் புதிதாக கட்டப்பட்ட தடுப்புசுவர் இடிந்து விழுந்தது. தற்போது அந்த இடத்தில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

மீனாட்சி ஊத்து பகுதியில் பாறாங்கற்கள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜோதிபாஸ் தலைமையில் சாலைப்பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சாலையில் விழுந்து கிடந்த பாறாங்கற்களை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரடைந்தது.

இந்த நிலையில் நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் ஆறுகளில் நீர் வரத்து ஏற்பட்டு, அணைகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. எனவே, அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அதன்படி 65 அடி உயரமுள்ள பாலாறு-பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 47.44 அடியாகவும், 90 அடி உயரமுள்ள பரப்பலாறு அணையின் நீர்மட்டம் 68.22 அடியாகவும், 66.47 அடி உயரமுள்ள வரதமாநதி அணையின் நீர்மட்டம் 64.47 அடியாகவும் உள்ளது.

இதுதவிர 79.99 அடி உயரமுள்ள குதிரையாறு அணையின் நீர்மட்டம் 65.40 அடியாகவும், 39.37 அடி உயரமுள்ள நங்காஞ்சியாறு அணையின் நீர்மட்டம் 16.79 அடியாகவும் உள்ளது. மேலும் நங்காஞ்சியாறு அணையை தவிர மற்ற அணைகளுக்கு நீர்வரத்து உள்ளது. எனவே, ஒருசில நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் அனைத்து அணைகளும் நிரம்பி விடும் வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News