செய்திகள்
மு.க.ஸ்டாலின்

பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக டெல்லி பயணம் - மோடியுடன், மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

Published On 2021-06-16 22:51 GMT   |   Update On 2021-06-16 22:51 GMT
டெல்லி செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுக்கிறார். அப்போது, கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துகிறார்.
சென்னை:

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து தமிழகத்தின் முதல்-அமைச்சராக கடந்த மாதம் (மே) 7-ந் தேதி மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார்.

மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகம் இருந்ததால், ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் தேவை பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதங்கள் எழுதி வந்தார். செங்கல்பட்டில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி மையத்தை விரைவில் தொடங்குவது குறித்தும் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது மத்திய அரசு தொடர்புடைய ‘நீட்’ தேர்வு பிரச்சினை, ஹைட்ரோ கார்பன், 7 பேர் விடுதலை ஆகியவை தலைதூக்குகின்றன.

மேலும், தற்போது தமிழகத்தில் செலவீனம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி. பாக்கித்தொகை தேவைப்படுகிறது.

இந்த நிலையில் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) டெல்லி செல்கிறார்.

அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் அவர், தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகளை நேரில் வலியுறுத்துவதோடு, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளிக்கிறார்.



டெல்லி பயணத்திற்காக இன்று காலை 7 மணிக்கு சென்னையில் உள்ள வீட்டில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு, காலை 7.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். 7.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார்.

காலை 10 மணிக்கு அவர் டெல்லி விமான நிலையத்தை சென்றடைகிறார். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு தமிழ்நாடு இல்லத்திற்கு செல்கிறார். பின்னர் டெல்லியில் உள்ள தி.மு.க. கட்சி அலுவலகமான அறிவாலயத்திற்கு சென்று பார்வையிடுகிறார். பின்னர் மீண்டும் தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்புகிறார்.

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பிரதமர் அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கு இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.

அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அவர் கொடுக்கிறார்.

அதில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அளிக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை நேரில் மு.க.ஸ்டாலின் வற்புறுத்துவார்.

இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தமிழ்நாடு இல்லத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளிப்பார். இன்று இரவு டெல்லியில் அவர் தங்குகிறார்.

அதனைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே டெல்லியில் உள்ளார். டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனும் அங்கு இருக்கிறார். தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை செயலாளர், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் உள்ளிட்ட சில அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர். தி.மு.க.வின் அனைத்து எம்.பி.க்களும் அங்கு இருக்கின்றனர்.

முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் டெல்லிக்கு முதல் முறையாக செல்லும் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

சில அமைப்புகளின் அச்சுறுத்தல் இருப்பதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லியில் ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்குகிறது.
Tags:    

Similar News