செய்திகள்
ராமதாஸ்

மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரியில் பட்டுப்புழு பற்றிய பட்டப்படிப்பை நிறுத்தக்கூடாது- ராமதாஸ்

Published On 2021-09-13 09:35 GMT   |   Update On 2021-09-13 12:06 GMT
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்தின் ஒரு துறையாக இருந்த பட்டுப்புழுவியல் பட்டப்படிப்பு 2014-ம் ஆண்டில் மேட்டுப்பாளையத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு மாற்றப்பட்டது.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரியில் கற்பிக்கப்பட்டு வரும் பட்டுப்புழுவியல் பட்டப்படிப்பை நிறுத்தி வைப்பதாக கோவை வேளாண் பல்கலைக் கழகம் அறிவித்திருப்பதை எதிர்த்து போராட்டம் மேற்கொண்டுள்ளனர். படிக்க வேண்டிய மாணவர்களை போராடும் சூழலுக்கு வேளாண்மை பல்கலைக்கழக நிர்வாகம் தள்ளியிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்தின் ஒரு துறையாக இருந்த பட்டுப்புழுவியல் பட்டப்படிப்பு 2014-ம் ஆண்டில் மேட்டுப்பாளையத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு பட்டுப்புழுவியல் படிப்புக்குத் தேவையான பட்டுப்புழு வளர்ப்புக் கூடங்கள், மல்பெரிச் செடி தோட்டம், ஆய்வகங்கள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனால், பட்டுப்புழுவியல் படிப்புக்கு மாணவர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அப்படிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் அப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.

பட்டுப்புழுவியல் படிப்பு முடக்கப்படுவதைக் கண்டித்து வனவியல் கல்லூரியில் அப்படிப்பை படித்து வரும் மாணவர்கள் கடந்த 5 நாட்களாக அறவழிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் வேளாண் பல்கலைக்கழக நிர்வாகம் நடத்திய பேச்சுகள் தோல்வியடைந்து விட்டன.

அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு எதிரான அடக்கு முறையை பல்கலைக்கழகம் எடுத்துள்ளது. இது பெரும் சிக்கலாக வெடிப்பதற்கு முன் தீர்வு காணப்பட வேண்டும். தமிழக முதலமைச்சரும், வேளாண் அமைச்சரும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பட்டுப்புழுவியல் பட்டப்படிப்பு தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு

Tags:    

Similar News