செய்திகள்
டெங்கு கொசு

டெங்குவை கட்டுப்படுத்த தமிழகத்துக்கு மத்திய குழு வருகிறது

Published On 2021-11-03 09:59 GMT   |   Update On 2021-11-03 09:59 GMT
டெங்குவை கட்டுப்படுத்த மத்திய அரசு சிறப்பு குழுக்களை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த குழுக்கள் டெங்கு பாதிப்பு அதிகமுள்ள 9 மாநிலங்களுக்கும் செல்கிறது.
சென்னை:

நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தி வரும் சூழலில் டெங்கு காய்ச்சல் பரவுவது மாநில அரசுகளுக்கு கடும் சவாலாக மாறி உள்ளது.

குறிப்பாக தலைநகர் டெல்லியில் டெங்கு பாதிப்பு மிக அதிக அளவில் உள்ளது. இதுவரை அந்த மாநிலத்தில் சுமார் 1600 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி தவிர அரியானா, பஞ்சாப், கேரளா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சல் மிக அதிகமாக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை சமீபத்தில் சிறப்பு கூட்டம் நடத்தி ஆய்வு செய்தது. அப்போது 9 மாநிலங்களிலும் தனித்தனி குழுக்கள் அமைத்து சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டால் தான் டெங்குவை கட்டுப்படுத்த முடியும் என்ற சூழ்நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பேரில் டெங்குவை கட்டுப்படுத்த மத்திய அரசு சிறப்பு குழுக்களை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த குழுக்கள் டெங்கு பாதிப்பு அதிகமுள்ள 9 மாநிலங்களுக்கும் செல்கிறது.

அதன்படி தமிழகத்திற்கும் மத்திய குழு வர உள்ளது. அந்த குழுவுடன் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளும் இணைந்து டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News