கோவில்கள்
சஞ்சவீராயர் கோவில்

காஞ்சிபுரத்தில் பிரமாண்ட ஆஞ்சநேயர் ஆலயம்

Published On 2022-04-04 01:35 GMT   |   Update On 2022-04-04 01:35 GMT
இக்கோவில் ராமாயண காலத்துடன் தொடர்புடையது. அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து சென்றபோது, மலைத் துண்டுகள் விழுந்த இடங்களில் இதுவும் ஒன்று என்கிறது தல வரலாறு.
காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ள சஞ்சவீராயர் கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த ஆலயம், ஆஞ்சநேயருக்காக அமைந்திருக்கும் பிரமாண்ட திருக்கோவில்களில் சிறப்பு வாய்ந்ததாகும். ஆலயம் முழுவதும் கற்களால் கட்டப்பட்டது.

இக்கோவில் ராமாயண காலத்துடன் தொடர்புடையது. அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து சென்றபோது, மலைத் துண்டுகள் விழுந்த இடங்களில் இதுவும் ஒன்று என்கிறது தல வரலாறு.

இந்த ஆலயம் 1456 முதல் 1543 வரை வாழ்ந்த, லட்சுமி குமார தாத்தாச்சாரியார் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது. இவர் சிறந்த அறிஞராகவும், விஜயநகரப் பேரரசில் மிகப்பிரபலமாகவும், ஆளுமை கொண்டவராகவும் இருந்திருக்கிறார்.

வரதராஜப் பெருமாளை தரிசித்து விட்டு செல்லும் வழியில் இவ்விடத்தில், தாத்தாச்சாரியார் தனது குழுவினருடன் தங்கினார். அப்போது அவரிடம் இருந்த செல்வத்தைப் பறிக்க வந்த திருடர் கூட்டத்தை குரங்குகளின் வாயிலாக ஆஞ்சநேயர் காத்தருளினார். அதற்கு நன்றிக்கடனாகவே இந்த ஆலயத்தை அவர் எழுப்பியிருக்கிறார்.

கோவிலின் நுழைவு வாசல் தெற்கு பக்கம் உள்ளது. கோபுரங்கள் எதுவும் இல்லாமல், நான்கு தூண்களைக் கொண்ட மண்டபம் ஒன்றுதான் நம்மை ஆலயத்திற்குள் வரவேற்கும் வகையில் நிற்கிறது.

ஆலய கருவறைக்குள் சஞ்சீவிராயர் என்ற பெயரில் ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

மூலவரின் கருவறைக்கு எதிரே 24 தூண்கள் கொண்ட கல் மண்டபம் இருக்கிறது. இதில் கிழக்கு நோக்கியபடி மகாலட்சுமி தாயார் தரிசனம் தருகிறார்.

ராமர், சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோர், ஆஞ்சநேயரின் கருவறைக்கு வெளியே தெற்கு நோக்கி வீற்றிருந்து அருள்கின்றனர்.

கிழக்குப் பிரகாரத்தில் கருடாழ்வார் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில், 5 அடி உயரத்தில் சிரித்த முகத்துடன் காட்சி தருகிறார்.

காஞ்சிபுரம் நகருக்கு தெற்கே 9 கி.மீ. தொலைவில், அய்யங்கார்குளம் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் வழியில் பாலாறு பாலம் தாண்டியதும் அய்யங்கார் கூட்ரோடு வரும். அதில் இருந்து வலதுபுறம் 5 நிமிடம் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
Tags:    

Similar News