செய்திகள்
சின்ன வெங்காயம்

மதுரையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.140-க்கு விற்பனை

Published On 2019-11-27 10:23 GMT   |   Update On 2019-11-27 10:23 GMT
மதுரையில் சின்ன வெங்காயம் விலை உயர்வு காரணமாக ஆம்லேட் மற்றும் உணவு பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது.
மதுரை:

சமீபத்தில் பெய்த மழை மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது.

மதுரையில் உள்ள சென்ட்ரல் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் வரத்து பாதியாக குறைந்துள்ளதால் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த மாதம் ரூ.60 முதல் 80 வரை விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் இன்று ரூ.120 முதல் 100 வரை விற்பனை செய்யப்பட்டது.

சில்லரை வியாபாரிகள் கூடுதலாக ரூ.20 முதல் 30 வரை விலை உயர்த்தி வியாபாரம் செய்து வருகிறார்கள்.

இதனால் தரமான சின்ன வெங்காயம் கிலோ ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து மதுரை சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தலைவர் முருகன் கூறியதாவது:-

சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளதாலும், தற்போது முகூர்த்தக்காலம் என்பதாலும் சின்ன வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளது.

தரமான சின்ன வெங்காயம் ரூ120-க்கு விற்பனை செய்யப்பட்டாலும் மற்ற சில்லரை மார்க்கெட்களில் கூடுதலாக ரூ.20 வரை அதிகம் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

இதே நிலை நீடித்தால் மேலும் விலை உயர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பல்லாரி கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரையும், மற்ற காய்கறிகள் வழக்கம் போல் விற்பனை ஆகிறது. முருங்கைக்காய் கிலோ ரூ.210-க்கு விற்பனை ஆகிறது.

சிறிய வெங்காயம் வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டால் விலையில் இறக்கம் ஏற்படலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சின்ன வெங்காயம் விலை உயர்வு காரணமாக ஓட்டலில் பண்டங்கள் விலை உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் பயன்படுத்தும் உணவு பண்டங்கள் விலை ரூ.5 கூடுதல் உயர்த்தப்பட்டுள்ளதாக ஓட்டல்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்லெட்களில் பல்லாரியை பயன்படுத்தினாலும் சின்ன வெங்காயம் விலை உயர்வை காரணம் காட்டி ஓட்டல்களில் ஆம்லெட்களின் விலையும் உயர்த்தி விட்டனர்.

இது போல ஆனியன், தோசை, ஆனியன் வடை விலையும் அதிகரித்துள்ளது. பிரியாணியுடன் வழங்கப்படும் தயிர் வெங்காயம் சில ஓட்டல்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

சின்ன வெங்காயத்தின் விலை உயர்வை காரணம் காட்டி ஓட்டல் பண்டங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News