ஆன்மிகம்
திருக்காட்கரை அப்பன்

ஓணம் தொடங்கிய ஆலயம்

Published On 2019-09-11 09:05 GMT   |   Update On 2019-09-11 09:05 GMT
கேரளா மாநிலம் திருக்காட்கரை என்ற இடத்தில் ஓணம் பண்டிகையுடன் தொடர்புடைய கோவில் ஒன்று அமைந்துள்ளது.
கேரளா மாநிலம் திருக்காட்கரை என்ற இடத்தில் ஓணம் பண்டிகையுடன் தொடர்புடைய கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலில் மகாவிஷ்ணு, வாமன அம்சமாக எழுந்தருளி தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஆகியவற்றை ஏந்தியபடி நிற்கும் இந்த பெருமாளுக்கு, ‘திருக்காட்கரை அப்பன்’ என்பது திருநாமமாக உள்ளது.

தாயார் பெருஞ்செல்வ நாயகி, வாத்சல்யவல்லி என்னும் திருப்பெயரில் அருள்பாலிக்கிறார். இந்தக் கோவிலில் சாஸ்தாவிற்கும், மகாலட்சுமிக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன. இந்த கோவிலின் விமானம் விருத்த விமானமாகும். இங்குள்ள சிவலிங்கத்தை, மகாபலி சக்கரவர்த்தி வழிபட்டதாக தல புராணம் தெரிவிக்கிறது. முதன் முதலாக திருக்காட்கரை அப்பன் கோவிலில் தொடங்கப்பட்ட ஓணம் திருவிழா தான், காலப்போக்கில் கேரளா மாநிலம் முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது.

கபில முனிவர் இந்த தலத்தில் உள்ள வாமனப் பெருமாளை வழிபட்டதால், இங்குள்ள தீர்த்தம் கபில தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கபில தீர்த்தத்தில் உள்ள நீரைதான் மகாபலி கமண்டலத்தில் எடுத்து வாமனருக்கு மூன்றடி நிலம் தருவதாக தாரை வார்த்துக் கொடுத்ததாகவும் கூற்று நிலவுகிறது.

திருக்காட்கரை அப்பனுக்கு நேந்திரம் வாழைக்குலை வழிபாடு மிகவும் சிறப்பு பெற்றதாகும். தங்களது கோரிக்கைகள் நிறைவேற பக்தர்கள் ஓணம் பண்டிகையன்று, அதிகாலையிலேயே நேந்திரம் குலைகளைத் தோளில் சுமந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று திருக்காட்கரை அப்பனுக்கு சமர்ப்பிப்பதைக் காணலாம். அந்தக் குலைகள் கோவில் முன் விதானங்களில் கட்டித் தொங்கவிடப்படுகின்றன. கேரள மக்களின் வீட்டிலும் ஓணப் பண்டிகை நாளன்று மரத்தாலான திருக்காட்கரை அப்பன் சிலை வைத்து வழிபாடு நடைபெறுகிறது.
Tags:    

Similar News