செய்திகள்
யானை

முதுமலை ஊராட்சியில் நெற்பயிர்களை அடிக்கடி சேதப்படுத்தும் காட்டு யானை

Published On 2020-11-28 10:55 GMT   |   Update On 2020-11-28 10:55 GMT
முதுமலை ஊராட்சியில் நெற்பயிர்களை அடிக்கடி காட்டு யானை சேதப்படுத்துவதால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.
கூடலூர்:

கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சி புலிகள் காப்பக வனத்தில் உள்ளது. ஊராட்சி பகுதியில் முதுகுளி, நாகம்பள்ளி, மண்டக்கரை, புலியாளம், கோழிமலை உள்பட பல குக்கிராமங்கள் உள்ளது. இங்கு விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். அடர்ந்த வனத்தின் கரையோரம் வசிப்பதால் காட்டு யானைகள்,மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் அடிக்கடி வந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

தற்போது நெல், வாழை மற்றும் பலவகை காய்கறிகள் பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் ஊராட்சி பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டு யானை ஒன்று முகாமிட்டு வருகிறது. தொடர்ந்து அங்கு பயிரிட்டுள்ள நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தி வருகிறது. இன்னும் 2 வாரங்களில் நெற்கதிர்கள் அறுவடை செய்ய உள்ள நிலையில் அந்த காட்டு யானை அவைகளை சேதப்படுத்தி வருகிறது.

இதில் கோழிமலை கமலா, குட்டி, கிருஷ்ணன் குஞ்சன், வாசு, கல்லஞ்சேரி வேலாயுதன், மணி உள்பட பல விவசாயிகளின் நெற்பயிர்களை ஏக்கர் கணக்கில் மிதித்து நாசம் செய்துள்ளது. இதனால் மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.

காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் தொடர் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-

காட்டு யானைகள் ஒவ்வொரு காலக்கட்டங்களில் விளையும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை வனத்துறையினரிடம் நேரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப்பிட்ட சில யானைகள் மட்டுமே ஊருக்குள் வந்து இடையூறு செய்கிறது. தற்போது நெற்கதிர்களை மிதித்தும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கவலையுடன் கூறினர்.
Tags:    

Similar News