செய்திகள்
கோவில் கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபரை காணலாம்

காளாத்தீசுவரர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை- மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2020-11-07 03:41 GMT   |   Update On 2020-11-07 03:41 GMT
உத்தமபாளையம் காளாத்தீசுவரர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பஸ் நிலையம் அருகே 800 ஆண்டு பழமையான காளாத்தீசுவரர், ஞானாம் பிகை கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக் கோவிலில் முன்னாள் ராணுவ வீரர்கள் 3 பேர் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கோவிலின் பின்பக்க சுற்றுச்சுவர் வழியாக மர்மநபர் ஒருவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தார். பின்னர் அந்த நபர், கோவிலின் சுவாமி சன்னதி முன்பு இருந்த 2 உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றார். இதற்கிடையே அதிகாலை வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு, அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் வந்தனர். அப்போது சன்னதி முன்பு இருந்த 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் பணியாளர்கள், இதுகுறித்து உடனடியாக உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு, இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்தனர். கோவில் பணியாளர்களிடம் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அப்போது, கோவிலில் மொத்தம் 6 உண்டியல்கள் உள்ளன. இதில், 2 உண்டியல்கள் மட்டும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் தேனி தடயவியல் நிபுணர் வீரமணி கோவிலில் பதிவான கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தார். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அந்த மோப்ப நாய் கோவிலில் இருந்து பஸ் நிலையம் வரை ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து கோவிலில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், முகத்தில் துணியை கட்டிக்கொண்டு மர்மநபர் ஒருவர் கம்பியுடன் கோவிலின் பின்பக்க வழியாக சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனை பதிவு செய்து கொண்ட போலீசார், இந்த கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News