ஆன்மிகம்
மதுரையை அடுத்த அழகர்கோவிலில் பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதியில் தரிசித்த பக்தர்கள்

கள்ளழகர், திருப்பரங்குன்றம் கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம்

Published On 2020-09-02 07:33 GMT   |   Update On 2020-09-02 07:33 GMT
கள்ளழகர், திருப்பரங்குன்றம் கோவிலில் சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நேற்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. மேலும் சக்கரத்தாழ்வார், கல்யாணசுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் சன்னதிகளிலும் பூஜைகள் நடந்தன. இக்கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதியிலும் பக்தர்கள் மாலைகள் அணிவித்து பொங்கல் வைத்து வணங்கினர்.

இக்கோவிலின் உப கோவிலான அழகர்மலை உச்சியில் உள்ள ஆறாவது படை வீடு சோலைமலை முருகன் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். நூபுரகங்கை தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை. மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலிலும், அய்யப்பன் கோவிலிலும் பக்தர் அரசு விதிமுறைக்கு உட்பட்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக கள்ளழகர்கோவிலை சார்ந்த கோவில்களில் அனைத்து பிரகாரம் மற்றும் பக்தர்கள் அமரும் இடம் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் முறையில் மாற்றி அமைத்து தனித்தனி பொட்டலங்களாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா, கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் நேரில் ஆய்வு செய்தார்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் 165 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. இதனையொட்டி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை அதிகரித்தது. கோவில் வாசல் முன்பு பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்களது கால்களை கழுவிய பின்பே உள்ளே சென்றனர். தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டது. கோவிலுக்குள் சமூக இடைவெளிவிட்டு ஒவ்வொருவராக கருவறைக்கு சென்று முருகப் பெருமானை சாமி தரிசனம் செய்தனர். அங்கு பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் தட்டுகள் மூலம் விபூதி பிரசாதம் வைக்கப்பட்டிருந்தது. அதை பக்தர்கள் எடுத்துச் சென்றனர்.

கோவிலுக்குள் மற்ற சன்னதிகளுக்கு பக்தர்கள் செல்லாதபடி தடுப்புகள் போடப்பட்டு இருந்தது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை பொறுத்தவரை செவ்வாய்க்கிழமை என்றாலே பக்தர்கள் முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள வேலுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவார்கள். ஆனால் நேற்று அரசின் கட்டுப்பாடுகளால் பாலாபிஷேகம் நடத்த அனுமதிக்கப்படவில்லை. இதேபோல கோவிலுக்குள் பூ, மாலை,தேங்காய், பழம் தட்டு கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதை அறியாது ஏராளமான பக்தர்கள் பூ, மாலை, பழங்களுடன் கூடிய பூஜை பொருட்களை கொண்டு வந்தனர்.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், ஜெனக நாராயணபெருமாள் கோவில், திரவுபதி அம்மன் கோவில், திருவேடகம் ஏடகநாதர் கோவில், தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோவில், குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோவில் உள்பட இப்பகுதியில் உள்ள கோவில்கள் நேற்று அதிகாலை திறக்கப்பட்டன. இக்கோவிலில் பக்தர்கள் வளாகத்தில் 20 பேர் சமூக இடைவெளி விட்டு நிற்கக்கூடிய வட்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் 167 நாட்களுக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டது. கோவில் முன்பாக கை கழுவும் எந்திரம் மூலம் பக்தர்கள் கை கழுவினார்கள். அர்ச்சகர் சண்முகவேல் பூஜை செய்து பிரசாதம் வழங்கினார். செயல் அலுவலர் சத்தியநாராயணன், ஆலய பணியாளர்கள் பூபதி, வசந்த் ஆகியோர் கொரோனா தொற்று விழிப்புணர்வு குறித்து மக்களிடம் எடுத்து கூறினர்.
Tags:    

Similar News