செய்திகள்
சபரிமலை

பாபர் மசூதி இடிப்பு தினம் - சபரிமலையில் பலத்த பாதுகாப்பு

Published On 2019-12-06 05:17 GMT   |   Update On 2019-12-06 05:17 GMT
இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இருமுடி கட்டுடன் சபரிமலை வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்பு 18-ம் படி ஏறிச்செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் இருந்தே சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பல மணி நேரம் காத்திருந்த பிறகே பக்தர்களால் சாமி தரிசனம் செய்ய முடிகிறது.

பக்தர்கள் வருகை அதிக மாக இருப்பதால் ஏற்கனவே சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இன்று டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை சன்னிதானத்தில் நவீன துப்பாக்கி ஏந்திய அதிவிரைவு அதிரடிப்படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருமுடி கட்டுடன் சபரிமலை வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்பு 18-ம் படி ஏறிச்செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

சபரிமலை வரும் பக்தர்கள் 18-ம் படி ஏறிய பின்பு கோவிலின் இடது புறத்தில் நெய் தேங்காயை உடைப்பார்கள். நேற்று முதல் அந்த பகுதியில் நெய் தேங்காய் உடைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதில் மாளிகை புரத்தம்மன் கோவில் அருகே பக்தர்கள் நெய் தேங்காய் உடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய பிரமுகர்கள் சிறப்பு தரிசனமும் இன்று இரவு வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.



சபரிமலையில் சந்தேகப்படும் படி யாராவது வருகிறார்களா? என்பதை கண்டறிவதற்காக பம்பை முதல் சன்னிதானம் வரை கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வான்வழியாக கண்காணிக்க ஹெலிகாப்டர் ரோந்தும் நடைபெறுகிறது. ஹெலிகாப்டரை அவசர காலத்தில் சபரிமலையில் இறக்குவதற்காக சன்னிதானத்தில் 2 இடங்களும் தேர்வு செய்யப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது.

சபரிமலை சன்னிதான சிறப்பு போலீஸ் அதிகாரி ஸ்ரீநிவாஸ் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


Tags:    

Similar News