செய்திகள்
கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையம்

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

Published On 2019-11-09 11:24 GMT   |   Update On 2019-11-09 11:24 GMT
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவெறும்பூர்:

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மத்திய பாதுகாப்பு படைக்கலன் தொழிற்சாலைகளில் ஒன்றான துப்பாக்கி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதியைச்சேர்ந்த குடியிருப்புவாசிகள் பயன்பெறும் வகையில் ரவுண்டானா பகுதியில் இரண்டு ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்றும் உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை அந்த ஏ.டி.எம்.மில் இருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏ.டி.எம். மையத்திற்கு வந்த மர்ம நபர்கள் உள்ளே நுழையும் முன்பு அதன் வாயிலில் மிளகாய் பொடியை தூவியுள்ளனர். பின்னர் உள்ளே சென்று கற்களை கொண்டு எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

அப்போது அந்த வழியாக நடந்து சென்ற ஒருவர் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனே கூச்சல் போட்டார். அடுத்த வினாடி துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள ரோந்து வாகனம் ஒலி எழுப்பியவாறு ஏ.டி.எம். மையத்தை நோக்கி வந்தது.

இதற்கிடையே கொள்ளையர்கள் சுதாரித்துக் கொண்டு வெளியே ஓடிவந்து அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று மறைந்தனர்.

நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வங்கி ஏ.டி.எம். கொள்ளை முயற்சி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏ.டி.எம்.மில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் 2 பேரும் தங்களை அடையாளம் காணாமல் இருப்பதற்காக முகத்தில் கருப்பு நிற ஜெல் போன்ற மை ஒன்றை பூசியிருந்தனர். மேலும் மிளகாய் பொடியையும் அங்கு தூவிச்சென்றுள்ளனர்.

சம்பவ இடத்தில் மோப்ப நாய் ஸ்பார்க் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த மோப்ப நாய் ஏ.டி.எம். மையத்தில் இருந்து 100 மீட்டர் ஓடி நின்றது. தடயவியல், கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரித்தனர். சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஏ.டி.எம். கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கடந்த வாரம் பெல் நிறுவன வளாகத்தில் உள்ள வங்கியில் ரூ.1½ கோடி கொள்ளை போன சம்பவம் சம்பவத்தின் பின்னணி மற்றும் கொள்ளையர்கள் யார் என்று கண்டுபிடிக்கும் முன்னரே மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News