ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

சுத்தம்- அது ஈமான் எனும் இறை நம்பிக்கையின் ஒரு பகுதி

Published On 2021-03-02 04:12 GMT   |   Update On 2021-03-02 04:12 GMT
‘சுத்தம் சுகம் தரும்’ என்பது நாம் அறியாத ஒன்றல்ல. இதனால் தான் ‘சுத்தம்- அது ஈமான் எனும் இறை நம்பிக்கையின் ஒரு பகுதி’ என்று எடுத்துரைத்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
மனிதன் கடைபிடிக்க வேண்டிய கட்டாயக் கடமைகளில் தூய்மையும் ஒன்று. ‘சுத்தம் சுகம் தரும்’ என்பது நாம் அறியாத ஒன்றல்ல. நாம் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்ட ஒன்று. நமது உணவு, உடை, உடல், இருப்பிடம் என யாவற்றிலும் நாம் தூய்மையை நன்கு கடைபிடிக்க வேண்டும். இதனால் தான் ‘சுத்தம்- அது ஈமான் எனும் இறை நம்பிக்கையின் ஒரு பகுதி’ என்று எடுத்துரைத்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

இறை நம்பிக்கை என்பது வெறும் மனதளவிலான நம்பிக்கை மட்டுமல்ல; அது செயலளவிலானதும் கூட என்பதையே அந்நபிமொழி நமக்கு நன்கு சுட்டிக்காட்டுகிறது.

இதனால் தான், நாம் சாப்பிடும் முன் கைகளை தேய்த்துக் கழுவ வேண்டும், சாப்பிட்ட பின்பும் கைகளை கழுவி, வாய் கொப்பளிக்கவும் வேண்டும். தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும். தினமும் குளிக்க வேண்டும், மலம், சிறுநீர் கழித்த பின் அவ்வுறுப்புக்களையும், கைகளையும் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். காலணி அணிய வேண்டும், வீடுகளை, வீட்டு வாசலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், உறங்கும் முன் படுக்கையை உதறிக்கொள்ள வேண்டும் என்பது உள்பட மனிதன் தன் அன்றாட வாழ்வில் தினமும் கடைபிடிக்க வேண்டிய அனைத்து தூய்மைமுறைகள் குறித்து இஸ்லாம் வலியுறுத்தி கூறியுள்ளது. இவை அனைத்தும் திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இடம்பெற்றுள்ளன. அவை வருமாறு:

“மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்; ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள்- நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்”. (திருக்குர்ஆன் 2:168)

“நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ் வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்”. (திருக்குர்ஆன் 2:172)

“ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ், அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 7:31)

“உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக. மேலும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக”. (திருக்குர்ஆன் 74:4,5)

“(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், நல்ல (மேலான) உணவையும் (ஆகாதவையென்று) தடுப்பவர் யார்?” என்று கேட்டு ‘அது இவ்வுலகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே! எனினும்) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது’ என்றும் கூறுங்கள். அறியக்கூடிய மக்களுக்கு (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்”. (திருக்குர்ஆன் 7:32)

“நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் (அதற்கு முன்னர்) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் கைகளையும், கணுக்கால்கள் வரையில் உங்கள் இரு பாதங்களையும் கழுவிக்கொள்ளுங்கள். அன்றி, (உங்கள் கையில் நீரைத் தொட்டு) உங்கள் தலையை தடவிக் கொள்ளுங்கள். நீங்கள் முழுக்குளிப்புடையவர்களாக இருந்தால் (கை, கால்களை மட்டும் கழுவினால் போதாது. உடல் முழுவதையும் கழுவி) தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கஷ்டத்தைத் தர அல்லாஹ் விரும்பவில்லை. எனினும், அவன் உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கி வைக்கவுமே விரும்புகின்றான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக!”. (திருக்குர்ஆன் 5:6)

இப்படியாக சுத்தம் பற்றி இஸ்லாம் மிக விரிவாகப் பேசுகிறது. நாம் தான் பலநேரங்களில் தூய்மையை கடைபிடிப்பதில்லை அல்லது கவனக்குறைவாக இருந்து விடுகிறோம். இதன் விளைவு நம்மை மட்டுமல்ல நம்மைச் சுற்றியிருப்பவர்களையும், நம் சந்ததியினரையும் பாதிக்கிறது என்பது மட்டும் உண்மை.

‘சுத்தம் சோறு போடும், கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி’ என்பன போன்ற பழமொழிகள் சுத்தத்தின் அவசியத்தை நமக்கு நன்கு வலியுறுத்துகின்றன. நாம் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தையும், அதற்கான பழக்கத்தையும் குழந்தைப் பருவத்திலிருந்தே ஊட்டி வரவேண்டும். ‘தூய்மை தேசம்’ என்பது எங்கோ ஒரு மூலையிலுள்ள ஒரு திட்டமல்ல. நமது வீட்டு மூலையை சுத்தம் செய்வதிலிருந்து நாம் தொடங்க வேண்டிய நமக்கான திட்டம் தான் அது.

ஆரோக்கியம் மலர வேண்டுமென்றால் அது கட்டாயம் சுத்தத்திலிருந்து தான் தொடங்கப்பட வேண்டும். நீர் மாசு, நில மாசு, காற்று மண்டல மாசு, வளி மண்டல மாசு என எல்லாமுமே மாசுபட்டுக் கிடக்கிற போது அவற்றின் மாசுகளை நாம் எப்படி நீக்கப் போகிறோம் என்பது தான் இன்றைக்கு நம் முன்னுள்ள பெரும் சவால்.

வாருங்கள்... அசுத்தங்களை அகற்றிடுவோம்... சுத்தங்களை போற்றிடுவோம்...!!

மவுலவி எஸ் என் ஆர் ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
Tags:    

Similar News