செய்திகள்
கோப்புப்படம்

நீண்ட தேர்தல் நடைமுறைதான் மேற்கு வங்காள கிராமப்புற பகுதிகளில் கொரோனா அதிகரிப்புக்கு காரணம்

Published On 2021-05-16 23:13 GMT   |   Update On 2021-05-16 23:13 GMT
கொரோனா அதிகரித்து வரும் மாநிலங்களில் ஒன்றாக மேற்கு வங்காளம் திகழ்கிறது. அதற்கு, அங்கு மாதக்கணக்கில் நீண்ட தேர்தல் நடைமுறைதான் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்
கொல்கத்தா:

நீண்ட தேர்தல் நடைமுறைதான் மேற்கு வங்காள கிராமப்புற பகுதிகளில் கொரோனா அதிகரிப்புக்கு காரணம். இதன் காரணமாகவே சில இடங்களில் நூறு மடங்கு வரை கொரோனா அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் மாநிலங்களில் ஒன்றாக மேற்கு வங்காளம் திகழ்கிறது. அதற்கு, அங்கு மாதக்கணக்கில் நீண்ட தேர்தல் நடைமுறைதான் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர். தமது கருத்துக்கு ஆதாரமாக பல புள்ளிவிவரங்களையும் அவர்கள் எடுத்துக்காட்டுகின்றனர்.

கடந்த பிப்ரவரி 26-ந் தேதி, மேற்கு வங்காள தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெறும் 3 ஆயிரத்து 343தான். ஆனால் அது, நேற்று முன்தினம் 1.32 லட்சமாக எகிறியிருக்கிறது. இது 40 மடங்கு அதிகரிப்பு.



தலைநகர் கொல்கத்தா தவிர்த்த மாவட்டங்களை மட்டும் எடுத்துக்கொண்டால், பாதிப்பு இன்னும் மோசம். கடந்த பிப்ரவரி 26-ந் தேதி, மாவட்டங்களில் வெறும் 2 ஆயிரத்து 183 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 1.06 லட்சம் பேர் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர். இது கவலையூட்டும் 48 மடங்கு அதிகரிப்பாகும்.

‘மேற்கு வங்காள கிராமப்புற பகுதிகளில் இவ்வாறு கொரோனா தொற்று எண்ணிக்கை எகிறியதற்கு, நீண்ட தேர்தல் நடைமுறைதான் காரணம் என்பதில் சந்தேகமே இல்லை. இந்நிலைக்கான காரணம் அரசியல் மட்டுமே’ என்று வெப்பமண்டல வியாதிகள் நிபுணரான டாக்டர் அமிதவா நந்தி அடித்துக் கூறுகிறார்.

மேற்கு வங்காளத்தில் மார்ச் 27-ந் தொடங்கி ஏப்ரல் 29-ந் தேதி வரை, முன்னெப்போதும் இல்லாத வகையில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதனால் கட்சிகள், தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடவடிக்கைகள், பிரசாரம் என்று தேர்தல் நடைமுறை நீண்டுகொண்டே சென்றது.

புர்பா பர்தாமன், பாஸ்சிம் போன்ற சில தொகுதிகளில் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். அங்கு மட்டும் தேர்தல் காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100 மடங்கு அதிகரித்துள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

வேறு மாநிலங்களுக்கு பணிபுரியச் சென்ற சொந்த மாநில தொழிலாளர்களையே கொரோனா பரிசோதனை சான்றிதழ் இன்றி அனுமதிக்க முடியாது என்றால், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக பெருமளவிலான மத்திய பாதுகாப்பு படையினரை எவ்வித சோதனையும் இன்றி கிராமப்புற பகுதிகளுக்குச் செல்ல அனுமதித்தது எவ்வாறு? இது நிச்சயம் கொரோனா எண்ணிக்கை அதிகரிப்புக்கு உதவியிருக்கிறது என்று சமூக மருத்துவ நிபுணரான சஞ்ஜீப் பண்டோபாத்யாய் கூறுகிறார்.

கொரோனாவை வெற்றிகொண்டுவிட்டதைப் போல மத்திய, மாநில அரசுகள் அலட்சியம் காட்டின என்றும் நிபுணர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Tags:    

Similar News