செய்திகள்
விஞ்ஞானி ஸ்வாதி மோகன்

நாசாவின் செவ்வாய் பயண திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இந்திய விஞ்ஞானி

Published On 2021-02-19 00:11 GMT   |   Update On 2021-02-19 16:55 GMT
நாசாவின் செவ்வாய் கிரக பயணத்தில் பங்கேற்று வழிநடத்திய பெருமை இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஸ்வாதி மோகனுக்கு கிடைத்துள்ளது.
வாஷிங்டன்:

செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ‘பெர்சவரன்ஸ்‘ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பினர். செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும், இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.

இதற்கிடையே, செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது என நாசா தெரிவித்துள்ளது. அது இரண்டு ஆண்டுகள் அங்கு சுற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆய்வில் இந்தியாவில் பிறந்த நாசா விஞ்ஞானி டாக்டர் ஸ்வாதி மோகனுக்கு மிகப் பெரிய பங்கிருப்பது தெரிய வந்துள்ளது.

2013ல் தொடங்கிய இந்த திட்டத்தில் முதலில் இருந்தே ஈடுபட்டு வந்தார் ஸ்வாதி. ஜி.என். அண்ட் சி எனப்படும் வழிகாட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக இருந்தார். ரோவர் வாகனம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பத்தை இவர் உருவாக்கியுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்த ஸ்வாதி, தன், ஒன்றாவது வயதில் அமெரிக்கா சென்றார். பள்ளியில் படிக்கும்போது, குழந்தைகள் நல மருத்துவராக வேண்டும் என நினைத்த அவருக்கு, 'ஸ்டார் டிரெக்' டிவி நிகழ்ச்சியைப் பார்த்ததால் புதிய உலகங்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

விண்வெளி ஆய்வில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுடன், ஆராய்ச்சி முடித்து, டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். மேலும், நாசாவின் சனி கிரகத்துக்கான பயணம், நிலவுக்கான பயண திட்டங்களிலும் இவர் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News