செய்திகள்
பிரதமர் மோடி

அடுத்த மாதம் முதல் வாரம் பிரதமர் மோடி சென்னை வருகிறார்

Published On 2021-01-10 07:38 GMT   |   Update On 2021-01-10 07:38 GMT
காவிரி-குண்டாறு திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் குடிமராமத்து திட்டம் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த திட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

அதன்பலனாக பல்வேறு ஏரி, குட்டை, குளங்கள் தூர் வாரப்பட்டதால் மழைநீர் அதிகம் சேமிக்கப்படுகிறது. இதனால் நிலத்தடிநீர் மட்டமும் உயர்ந்துள்ளது. மத்திய அரசும் நீர்நிலை மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

தமிழகத்தில் காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டதால் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அவரது ஆட்சியில் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.380 கோடி மதிப்பில் கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை ஏரியும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்தநிலையில் காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்துக்கான பணிகளில் தமிழக அரசு தீவிரம்காட்டி வருகிறது. இதற்காக ரூ.7,700 கோடி மதிப்பில் கரூர் மாவட்டம் கட்டளை முதல் விருதுநகர் மாவட்டம் குண்டாறு வரை 118 கிலோ மீட்டருக்கு நீண்ட கால்வாய் அமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் வீணாகும் வெள்ள உபரி நீர் இந்த கால்வாய் வழியாக கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு திருப்பிவிடப்பட உள்ளன. இதனால் இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி ஆவதுடன் லட்சக்கணக்கான ஏக்கர் நிலமும் பாசன வசதிபெறும்.

ஜெயலலிதாவின் யோசனையில் உருவான இந்த திட்டத்துக்கும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல் வடிவம் கொடுத்து வருகிறார்.

முதல்கட்டமாக கரூர் மாவட்டத்தில் ரூ.171 கோடி மதிப்பில் 5.5 கிலோ மீட்டர் தூரமும் அதன் பிறகு திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ரூ.160 கோடி மதிப்பில் 5.5 கிலோ மீட்டருக்கும் கால்வாய் வெட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் தொடங்க தயார் நிலையில் உள்ளது. இந்த திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா பிப்ரவரி முதல் வாரம் நடைபெற உள்ளது.

இதை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக அவர் சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது இந்த தகவலை தெரிவித்தார்.
Tags:    

Similar News