செய்திகள்
தமிழக சட்டசபை

அரசு வேலையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்வு

Published On 2021-09-13 11:06 GMT   |   Update On 2021-09-13 12:17 GMT
அண்ணா மேலாண்மை நிலைய வளாகத்தில் கூடுதல் பணியாளர்களுக்காக ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் வாடகை குடியிருப்பு அமைக்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

சென்னை:

தமிழக சட்டசபையில் மனிதவள மேலாண்மைத் துறையில் புதிய அறிவிப்புகளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.

அதில் கூறி இருப்பதாவது:-

100 சதவீதம் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதி தேர்வாக கட்டாயமாக்கப்படும்.

கொரோனா தொற்றால் பெற்றோர்கள் இருவரையும் இழந்தவர்கள், முதல் நிலை பட்டதாரிகள், அரசு பள்ளிகளில் தமிழ் மொழி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

புதிதாக தோற்று விக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர் வருவாய் மாவட்டங்களில் ஊழல்தடுப்பு கண்காணிப்பு பிரிவு அமைக்கப்படும்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பணியாளர் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகள் தாமதமானால் நேரடி நியமன வயது, உச்ச வரம்பு இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படும்.

 


மாற்றத்தை ஊக்குவிப்பதில் பாலின சமத்துவம், முக்கியமானது என்பதை உணர்ந்து நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ளப்படும் அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும். இதற்குரிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும்.

தலைமை செயலக ஆய்வு குழுக்கள் மற்றும் மாவட்ட ஆய்வு குழுக்களால் மேற்கொள்ளப்படும் திடீர் ஆய்வுகள் மற்றும் விரிவான ஆய்வுகளின் உரிய பலன்களை உடனுக்குடன் பெறுவதற்காக ஆய்வு பிரிவிற்கு ரூ.15 லட்சம் செலவில் மடிக்கணினிகள் மற்றும் அதனை சார்ந்த மென் பொருள்கள் வழங்கப்படும்.

அண்ணா மேலாண்மை நிலையத்தில் 2005ஆம் ஆண்டில் பணியாளர்களுக்காக ஆறு வாடகை குடியிருப்புகள் கட்டப்பட்டன. தற்போது கூடுதல் பணியாளர்களுக்காக அண்ணா மேலாண்மை நிலைய வளாகத்திலேயே ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் பணியாளர் வாடகை குடியிருப்பு அமைக்கப்படும்.

‘அ’ மற்றும் ‘ஆ’ பிரிவு அரசுப் பணியாளர்களில் 53 வயதுக்கு உட்பட்டவர்களுக்கே பிரத்யேகமாக பயிற்சி நடத்தப்படுகிறது. இதற்கு மாறாக, 53 வயதை கடந்த அலுவலர்களுக்கு பொதுவான தலைப்புகளான மனித வள மேலாண்மை, நேர மேலாண்மை, தலைமைப் பண்புகள் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு போன்ற பிரிவுகளில் அவர்களின் வயது மற்றும் பணி முதிர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு வகுப்பறை அல்லாத சூழலில் நடத்துவதற்கு கூடுதலாக ரூ.2 கோடி அண்ணா மேலாண்மை நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

மாநில அரசு பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் முதல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வரை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவுப் பணியாளர்கள், அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ பணிபுரியும் அரசு விடுதிக் காப்பாளர்கள் மற்றும் முறையான பயிற்சி பெறாத அனைத்து துறை பணியாளர்களுக்கும் அண்ணா மேலாண்மை நிலையத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ரூ.2 கோடிஒதுக்கீடு செய்யப்படும்.

அண்ணா மேலாண்மை நிலையத்தின் காட்சி ஊடகப்பாதை செயல் பாட்டினை மேம்படுத்தும்வ கையில் ரூ50 லட்சம் மதிப்பீட்டில் பிரத்யேகமாக ஒரு படப்பிடிப்புத்தளம் அமைக்கப்படும். மற்றும் அதற்கான அனைத்து உபகரணங்களும் வாங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... குஜராத் புதிய முதல்-மந்திரியாக பூபேந்திர பட்டேல் பதவி ஏற்பு

Tags:    

Similar News