செய்திகள்
கோப்புப்படம்

இந்தியா, அமெரிக்கா உள்பட 4 நாடுகளின் கடற்படை பயிற்சி: வருகிற 3-ந்தேதி முதல் தொடக்கம்

Published On 2020-10-31 01:51 GMT   |   Update On 2020-10-31 01:51 GMT
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் மலபார் கடற்பயிற்சி வருகிற 3-ந்தேதி முதல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.
புதுடெல்லி:

இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படைகள் பங்கேற்கும் மலபார் வரிசை கடற்பயிற்சி கடந்த 1992-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த பயிற்சியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜப்பானும் பங்கேற்று வருகிறது. இந்த வரிசையில் 24-வது மலபார் கடற்பயிற்சிகள் அடுத்த மாதம் (நவம்பர்) நடைபெறுகிறது.

தற்போது இந்தியா-அமெரிக்கா-ஜப்பான்-ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த மலபார் பயிற்சியில் 4-வது நாடாக ஆஸ்திரேலியாவும் பங்கேற்க இந்தியா அழைப்பு விடுத்தது. இதையேற்று ஆஸ்திரேலியாவின் ராயல் கடற்படையும் இந்த ஆண்டு மலபார் பயிற்சியில் இணைகிறது.

முன்னதாக 2007-ம் ஆண்டு ஆஸ்திரேலிய கடற்படை இந்த பயிற்சியில் இணைந்திருந்தது. அப்போது இந்த நடவடிக்கையை சீனா விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 24-வது மலபார் கடற்பயிற்சி வருகிற 3-ந்தேதி முதல் 2 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதற்கட்ட பயிற்சி 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை விசாகப்பட்டணத்தில் வங்காள விரிகுடா கடலில் நடக்கிறது. இரண்டாம் கட்ட பயிற்சி நவம்பர் மாத மத்தியில் அரபிக்கடலில் நடைபெறுகிறது.

3-ந்தேதி தொடங்கும் முதற்கட்ட மலபார் பயிற்சியில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஜான் மெக்கைன், ஆஸ்திரேலியாவின் எச்.எம்.ஏ.எஸ் பல்லாரத், ஜப்பானின் ஒனாமி ஆகிய போர்க்கப்பல்களும், அதனுடன் இணைந்த ஹெலிகாப்டர் வரிசைகளும் பங்கேற்கின்றன.

இந்தியா சார்பில் ரான்விஜய், ஷிவாலிக், சுகன்யா, சக்தி, சிந்துராஜ் போன்ற கப்பல்களும் கலந்து கொள்கின்றன. மேலும் ஹாக் ஜெட், நீண்டதூர கடல் கண்காணிப்பு விமானமான பி.81, டோர்னியர் விமானங் கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த பயிற்சியில் பங்கேற்கும் இந்திய குழுவுக்கு கிழக்கு பிராந்திய கட்டளை அதிகாரி வாத்சாயன் தலைமை தாங்குவார் என கடற்படை தெரிவித்து உள்ளது.

இந்த பயிற்சியில் கடல் மேற்பரப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு, வான் எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட கூட்டு மற்றும் நவீன பயிற்சிகள் நடைபெறும் எனக்குறிப்பிட்ட இந்திய கடற்படை அதிகாரி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த பயிற்சிகள் முற்றிலும் கடலிலேயே நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

லடாக்கில் சீனாவின் அத்துமீறலால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்த பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Tags:    

Similar News