ஆன்மிகம்
மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில்

செவ்வாய் பகவானுக்கு உரிய மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில்

Published On 2021-01-18 01:27 GMT   |   Update On 2021-01-18 01:27 GMT
நவக்கிரகங்களில் இது செவ்வாய்க்கு உரிய தலம் ஆகும். இங்கு உள்ள இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.
சுவாமி : அருள்மிகு வைத்தியநாத சுவாமி.
அம்பாள் : அருள்மிகு தையல் நாயகி.
மூர்த்தி : பஞ்சமூர்த்திகள், முத்துக்குமார சுவாமி, அங்காரகன் (செவ்வாய்) தன்வந்திரி, ஜடாயு பத்ரகாளி, அறுபத்து மூவர்.
தீர்த்தம் : சித்தாமிர்த தீர்த்தம்.
தலவிருட்சம் : வேம்பு மரம்.

தலச்சிறப்பு : சடாயு என்னும் புள் (பறவை), இருக்கு வேதம் (ரிக்குவேதம்), முருகவேல், சூரியனாம் ஊர் ஆகிய நால்வரும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கியதால் இத்தல நாயகர் புள்ளிருக்குவேளூர் எனவும் திருபுள்ளிருக்குவேளூர் என தனிச் சிறப்புடனும் அழைக்கப்படுகின்றார். உயிர்களின் தீராத நோய்களைத் தீர்க்கும் பொருட்டு, உமை தையல் நாயகியாய்த் தைல பாத்திரமும், சஞ்சீவியும் வில்வ மரத்தடி மண்ணும் கொண்டுவர இறைவன் இங்கு வைத்தியநாதராக எழுந்தருளிய தலம். 

இன்றும் நோய் தீர்க்கும் தலமாக அமைந்து உள்ளதால் பக்தர்கள் கார்த்திகை தோறும் இங்கு பெருமளவில் வந்து வழிபடுகின்றனர். இங்கு உள்ள செல்வ முத்துக்குமார சுவாமி மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வம் ஆவார். கார்த்திகை தோறும் இவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. சந்தனக் குழம்பு, மண் உருண்டை, சித்தாமிர்தம் ஆகியன நோய் தீர்க்கவல்லன, நவக்கிரகங்களில் இது செவ்வாய்க்கு உரிய தலம் ஆகும். இங்கு உள்ள இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.

தல வரலாறு : முன்னொரு காலத்தில் அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்தது. அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. வைத்தீசுவரன் கோயில் சென்று ஒரு மண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்து விட்டு வைத்தியநாத சுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்று கேட்டது. இதை அடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது. இந்த வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்த போது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைலநாயகி என்று பெயர் வந்தது.

வழிபட்டோர் : இராமர், ஜடாயு, சுப்பிரமணியர், சூரியன், அங்காரகன், தன்வந்தரி.

பாடியோர் : திருஞானசம்பந்தர், அப்பர், காளமேகப் புலவர், குமரகுருபரர், அருணகிரிநாதர், வடுகநாத தேசிகர்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

பூஜை விவரம் : ஆறு கால பூஜை, அர்த்தசாம பூஜையின் போது செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இதனைப் புனுகு காப்பு தரிசனம் என்பர்.

கோவில் முகவரி : 

அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவில்,
வைத்தீஸ்வரன் கோவில் - 609 117, 
சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்.

தொலைபேசி எண் : 04364 - 279423.
Tags:    

Similar News