செய்திகள்
தீப்பிடித்த டேங்கர் லாரிகள்

ஈரான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் அடுத்தடுத்து தீப்பிடித்த டேங்கர் லாரிகள்... 60 பேர் படுகாயம்

Published On 2021-02-14 03:27 GMT   |   Update On 2021-02-14 03:27 GMT
ஈரான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள சுங்கத்துறை வளாகத்தில் ஏராளமான டேங்கர் லாரிகள் தீப்பற்றியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
காபூல்:

ஈரான்-ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள ஆப்கானிஸ்தான் பகுதியியான இஸ்லாம் குவாலா நகரில் சுங்கத்துறை சோதனைச்சாவடி உள்ளது. ஈரானில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும், ஈரானுக்கு செல்லும் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன. எனவே, இந்த பகுதியில் எப்போதும் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில் நேற்று ,இரவு சுங்கத்துறை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரிகள் திடீரென தீப்பிடித்தன. என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள், அடுத்தடுத்து லாரிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்தன. 

இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பும் பதற்றமும் உருவானது. வாகன ஓட்டுனர்கள் மற்றும் அதிகாரிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பலர் தீப்பிடித்த பகுதியை விட்டு வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். 

பெட்ரோல், டீசல், எரிவாயு ஏற்றி வந்த நூற்றுக்கணக்கான லாரிகள் தீப்பிடித்ததால் அப்பகுதியில் உள்ள மின்சார உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மற்ற லாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்த வாகனங்கள் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. ஈரானில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஏராளமான ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

இந்த தீ விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. சேத மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News