ஆன்மிகம்
நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டப படித்துறையில் தாமிரபரணிக்கு சிறப்பு தீப ஆரத்தி நடந்தபோது எடுத்த படம்

தாமிரபரணி புஷ்கர நிறைவு விழா தொடங்கியது

Published On 2019-11-02 04:00 GMT   |   Update On 2019-11-02 04:00 GMT
நெல்லை-தூத்துக்குடி மாவட்ட தீர்த்த கட்டங்களில் தாமிரபரணி அந்த்ய புஷ்கர விழா தொடங்கியது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தாமிரபரணி புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடந்தது. இந்த புஷ்கர விழா நடந்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி தாமிரபரணி அந்த்ய புஷ்கர நிறைவு விழா நெல்லையில் நேற்று தொடங்கியது. இந்த விழா 4 நாட்கள் நடைபெற உள்ளது.

இதையடுத்து நெல்லை மற்றும் தூத்துக்குடியில் அமைந்துள்ள தீர்த்த கட்டங்களில் பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. தொடக்க நாளான நேற்று நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டப படித்துறையில் பந்தல்கால் நாட்டு விழா நடந்தது. முன்னதாக தைப்பூச மண்டபம் அருகே உள்ள படித்துறை கைலாசநாதர் கோவிலில் வேதபாராயணங்கள், சிறப்பு பூஜை நடந்தது.

பின்னர் கைலாசநாதர் கோவிலில் இருந்து பந்தல் கால் தைப்பூச மண்டபத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பந்தல் கால் நாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து தாமிரபரணி நதிக்கு பால், தயிர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து தாமிரபரணி நதியில் சைவ ஆதீனங்கள் மற்றும் பக்தர்கள் புனித நீராடினார்கள்.



இதேபோல் குறுக்குத்துறை முருகன் கோவில் அருகே உள்ள தீர்த்தக்கட்டத்திலும் விழா நடந்தது.

இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சாமி தரிசனம் செய்தார்.

விழாவையொட்டி தாமிரபரணி நதிக்கு சிறப்பு பூஜை, சிறப்பு ஹோமம், மகா தீபாராதனை போன்றவைகள் நடக்கின்றன. இதையொட்டி தைப்பூச மண்டபபடித்துறையில் பக்தர்களுக்கு புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அங்கு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவ குழுவினர் நிறுத்தப்பட்டு உள்ளனர். தீயணைப்பு வாகனம் மற்றும் ரப்பர் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. வருகிற 4-ந் தேதியுடன் (திங்கட்கிழமை) புஷ்கர நிறைவு விழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News